Saturday, July 13, 2024
Home » இலங்கையில் இருந்து 20 பேருக்கு ஹஜ் கடமை நிறைவேற்ற விசேட வாய்ப்பு

இலங்கையில் இருந்து 20 பேருக்கு ஹஜ் கடமை நிறைவேற்ற விசேட வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
June 6, 2024 3:28 pm 0 comment

இலங்கைக்கு சவூதி அரேபியாவினால் தொடர்ந்தும் வழங்கப்படும் உதவிகளில் இம்முறை 20 இலங்கையர்களுக்கு ஹஜ் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சவூதி அரேபியா இச்சந்தர்ப்பத்தை உலக முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. இம்முறை கடந்த வருடத்தை போன்று பாலஸ்தீனிய மக்களுக்கு விஷேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. காஸா போரில் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்களில் 1000 பேருக்கு இலவச ஹஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் சவூதி அரேபிய மன்னரின் விருந்தினராக செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மொத்தமாக 88 நாடுகளைச் சேர்ந்த 2300 பேர் இம்முறை சவூதி அரேபிய மன்னரின் விருந்தினர்களாக செல்கின்றனர். இம்முறை இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களில் உலமாக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் போன்றோர் அடங்குவர். இவர்களை வழியனுப்பும் நிகழ்வு சவூதி அரேபிய தூதரகத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய இஸ்லாமிய மதவிவகார அமைச்சின் பிரதிநிதி அஷ்-ஷைக் பத்ர் அல்- அனஸி கலந்து கொண்டார். இக்குழு இம்மாதம் 8 ஆம் திகதி புறப்படும்.

இலங்கையில் இருந்து மன்னரின் விருந்தினர்களாகச் செல்லும் குழுவினருக்கு சவூதி அரேபிய தூதுவர் மற்றும் சவூதி இஸ்லாமிய மத விவகார அமைச்சின் பிரதிநிதி ஆகியோரினால் ஹஜ் கடமையை நிறைவேற்றத் தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு பொதி வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையிலிருந்தும் 10 பேருக்கு இம்முறை உம்ரா செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மன்னரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு இதனைப் பொறுப்பேற்று செய்திருந்தது. உலகளாவிய ரீதியில் 1000 பேருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதோடு, நான்கு கட்டங்களாக பிரித்து இறுதியாக 250 பேரில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இறுதி விருந்தினர்களில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கையருக்கு வழங்கிய சந்தர்ப்பத்துக்காக சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் ஆகியோருக்கும் இலங்கை முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT