Saturday, July 13, 2024
Home » கொலைக் குற்றவாளிக்கு மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

கொலைக் குற்றவாளிக்கு மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

- குற்றவாளிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

by Rizwan Segu Mohideen
June 6, 2024 12:02 pm 0 comment

– பல்வேறு சர்ச்சைகள் நிறைந்த 2005 கொலைச் சம்பவம்

2005ஆம் ஆண்டு இராஜகிரிய, ரோயல் பார்க்கில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் மரண தண்டனை குற்றவாளியான டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தனி ஜயமஹா என்பவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்தமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு புறம்பானது எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்கமைய, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு, உயர் நீதிமன்றம் இதன் மூலம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்குமாறு கோரி பெண்கள் மற்றும் ஊடகங்களின் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த தீர்ப்பு இன்றையதினம் (06) உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய குழாமின் அமர்வில் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, மனுதாரருக்கு மைத்திரிபால சிறிசேன ரூ. 10 இலட்சம் (ரூ. 1 மில்லியன்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மற்றும் தந்தைக்கும் தலா ரூ, 10 இலட்சம் (ரூ. 1 மில்லியன்) நட்டஈட்டை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலுமொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை உள்நாட்டு மற்றும் சர்வதேச சாசனங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

19 வயதான சுவீடன் பிரஜையான யுவோன் ஜோன்சனை கடந்த 2005 ஜூன் 30ஆம் திகதி கொடூரமாக தாக்கி, கழுத்து நெரித்து கொலைசெய்ததாக ஜயமஹா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேற்படி யுவதி அணிந்திருந்த உடைகள் மூலமே அவரது கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் அவரது மண்டையோட்டின் 64 உடைவுகள் காணப்பட்டதாகவும் யுவோனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குறித்த நபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நீண்ட கால வழக்கு விசாரணையையடுத்து அவர் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றார்.

2012 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது 12 வருட சிறைத்தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. அத்துடன் 2013 இல் உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதிசெய்தது.

அதனையடுத்து 2016 இல் அவரது மரணதண்டனை ஜனாதிபதி பொது மன்னிப்பின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2019 நவம்பர் 11ஆம் திகதி ஜூட் சமந்த அந்தனி ஜயமஹா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானார்.

அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அவர் குருவிட்ட சிறையில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணையைத் தொடர்ந்து, ஜயமஹா வெளிநாடு செல்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ஆயினும் அதற்கு முன்னரே அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா எனும் இளைஞரை விடுவிப்பதற்காக அத்துரலியே ரத்தன தேரர் முன்னின்று செயற்பட்டதாகவும், இது தொடர்பில் வழங்கப்பட்ட விளக்கங்களுக்கு அமைவாகவே அவரை விடுவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த வேளையில் ஊடக அறிவித்தலொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT