Thursday, October 10, 2024
Home » தொடர்ச்சியாக மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

தொடர்ச்சியாக மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

- பிரதமர் நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து

by Prashahini
June 5, 2024 1:48 pm 0 comment

இந்திய பிரதமராக மூன்றாவது தடவையாக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துத் தெரிவித்தார்.

குடும்ப பலம், செல்வ பலம், பரிவார பலம், உறவினர் பலம் இல்லாது, சாதாரண குடும்பத்தில் இருந்து குஜராத் பிரதேசத்தை மையமாகக் கொண்டு, முதலமைச்சராக கடமையாற்றி, சிறப்பான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து, பின்னர் தொடர்ந்து மூன்று தடவை இந்தியாவின் பிரதமராக தெரிவாகி ஆட்சியமைப்பதற்கு நியமிக்கப்பட்டமைக்கு நரேந்திர மோடி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக்கு எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் நேருவுக்குப் பிறகு, மூன்று முறை பிரதமர் பதவியை வகிக்கும் ஆணையைப் பெற்ற பிரதமர் மோடி, தொடர்ச்சியாக மக்களின் நம்பிக்கையை பெற்று, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

ஒரு நாடாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய நட்புறவு நிலவ வேண்டும். எனவேதான் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட்டமை பொருத்தமான விடயமாக அமைந்து காணப்படுகிறது. உலகளாவிய அதிகார மையங்களை நோக்கும் போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது உண்மையில் சிறந்த நிலைப்பாடாகும். இதற்கு எமது பாராளுமன்றத்தின் ஆசியும் கிட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை மையமாக வைத்து வலுவான தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி மக்கள் பிரதிநிதித்துவத்தை பிரதமர் மோடியால் இவ்வாறு பெற முடிந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றது ஒரு வரலாற்று சாதனையாகும். சில தசாப்தங்களுக்கு முன்பு இந்தியா போராடிக்கொண்டிருந்த நேரத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நேரத்தில், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய, பொருளாதார நலன் அனைவருக்கும் சென்றடையும் பொருளாதார வளர்ச்சி மூலம் முன்னோக்கிச் செல்லும்போது, ​​உலகின் பல நாடுகள் மெதுவான பொருளாதார வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. கொவிட் நிலைமைக்குப் பின்னரும் கூட, பாரிய பொருளாதார வளர்ச்சியை அவரால் செயல்படுத்த முடிந்தது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரப் பலன்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும்போது, ​​பொதுமக்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த பலன்கள் ஒரு பிரிவினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் போது, ​​பின்னடைவு ஏற்படும். எனவே இந்நேரத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி ஆட்சி காலத்தில் நரேந்திர மோடி உதா கம்மான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எமக்கு உதவினார். நமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்த நேரத்தில், ஒரு நாடாக இந்தியா தான் அதிக உதவிகளையும், கடன் உதவிகளையும் வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x