Saturday, July 13, 2024
Home » வாழ்வின் அடிப்படையாக அமையும் நற்கருணை என்னும் மறைபொருள்

வாழ்வின் அடிப்படையாக அமையும் நற்கருணை என்னும் மறைபொருள்

by damith
June 4, 2024 10:10 am 0 comment

மனிதரை ‘உறவுகளின் முடிச்சு’ என்று பொருத்தமாக அழைக்கலாம். எல்லா உறவுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அன்பு. அந்த அன்பு யாரிடம் காட்டப்படுகிறதோ அதற்கேற்ப, அது வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் எடுக்கிறது.

திருச்சபை கடந்த ஞாயிறு கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடியது. கிறிஸ்து தாம் பாடுபடுவதற்கு முன்பு பாஸ்கா உணவைத் தம் சீடர்களுடன் உண்பதற்கு, ஆசையாய் இருந்தார் (லூக் 22:16), அவர் நமக்கு வழங்கியுள்ள நற்கருணை என்னும் உயிருள்ள உணவை (யோவா 6:51) உண்ண நாமும் ஆசையாய் இருக்கிறோமா?

திருச்சபையின் வாழ்வு முழுவதும் நற்கருணை என்னும் மறைபொருளுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. நற்கருணையின்றித் திருச்சபை இல்லை, திருச்சபையின்றி நற்கருணை இல்லை என்று சொல்லும் அளவிற்குத் திருச்சபையும் நற்கருணையும் இணைந்துள்ளன. இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, நற்கருணைப் பலிதான். ‘கிறிஸ்துவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாகும்,

நற்கருணைப் பலிதான். ‘கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சியுமாகும்’ நற்கருணைப் பல் இரக்கத்தின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு. பாஸ்கா விருந்து, இவ்விருந்தில் கிறிஸ்து உண்ணப்படுகிறார்: அகம் அருளால் நிரப்பப்படுகிறது: வரவிருக்கும் மாட்சிமையின் உறுதி மொழி நமக்கு அளிக்கப்படுகிறது (திருவழிபாடு. எண் 47).

நற்கருணைக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் இறப்பும் உயிர்ப்பும் நினைவு கூரப்படுகிறது அதே மறைபொருள் பிரசன்னமாகிறது: அதில் நாம் அருளடையாள முறையில் பங்கேற்கிறோம். நற்கருணை விண்ணக மகிமைக்கு அச்சாரமாகவும் உள்ளது எனவே, நற்கருணை முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

நற்கருணை: நம்மைக் கிறிஸ்துவுடனும், ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது, நற்கருணை நம்மைக் கிறிஸ்துவுடன் நெருக்கமாக இணைக்கின்றது. “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” (யோவா 6:56).

நற்கருணையை உட்கொள்வதால் நாமும் கிறிஸ்துவாக மாறி, ‘இனி வாழ்பவள் நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்’ (கலா 2:20) என்ற நிலையை அடைகிறோம்.

புனித தோமா அக்குவினா வாழ்ந்த துறவற மடம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தபோது, அவர் நற்கருணைப் பேழையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “ஆண்டவரே! நாங்கள் வெந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறோம்” என்று கதறினார், என்ன புதுமை! தீயானது தானாகவே அணைந்துவிட்டது. நற்கருணை தான் நமது காமத்தீ. காய்மகாரத்தீ, போட்டித்தீ, பொறாமைத்தீ, பேராசைத்தீ முதலிய பல்வேறு தீக்களை அணைக்கக்கூடிய ஆற்றல்மிகு அருளடையாளம்.

நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, ஒருவர் ஒருவருடனும் இணைக்கிறது. “அப்பம் ஒன்றே, ஆதலால் தாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்” (1 கொரி 10:17). எனவே, ‘கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் நாமனைவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரே. உடலும் உயிருமாக விளங்கவேண்டும்’

கிறிஸ்துவர்களிடையே நிலவிவரும் பாகுபாடு, குறிப்பாக சாதி வேறுபாடு ஓர் உயிர்க்கொல்லி நோய்: குணப்படுத்த முடியாத புற்றுநோய். சாதி வேறுபாட்டுடன் நாம் உட்கொள்ளும் நற்கருணை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் மருந்தாக அமையுமா? அல்லது நம்மை நீதித் தீர்ப்புக்கும் தண்டளைக்கும் உள்ளாக்கும் சாபக்கேடாக அமையுமா? நம்மை துரத்திக் கொண்டுவரும் கேள்வி .

அருட்தந்தை வை.இருதயராஜ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT