Home » இந்திய தேர்தல் முடிவுகள் 2024: தற்போதைய நிலவரம் என்ன?

இந்திய தேர்தல் முடிவுகள் 2024: தற்போதைய நிலவரம் என்ன?

by Prashahini
June 4, 2024 2:01 pm 0 comment

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 219 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 86,777 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேபோல, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2,48,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலியிலும் 1,87,508 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் (நண்பகல் 1.00 மணி நிலவரப்படி).

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.

           தமிழ்நாட்டின் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை 16,849 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அங்கு தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 68,275 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்சென்னை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 70,699 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் 38,3907 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார்.

மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் 41,468 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 14,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் நீடிக்கிறார்,

தி.மு.க வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் 1,40,367 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் விஜயபிரபாகரன் 1,064 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவர் 1.34,723 வாக்குகளும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1,33,659 வாக்குகளும் பெறறுள்ளனர்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கிறார். அவர், 1.22,740 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா 58,114 வாக்குகள் பெற்றுள்ளார்

           ஒடிஷா, ஆந்திரா சட்டப் பேரவைத் தேர்தல் நிலவரம் என்ன?

ஆந்திராவில் உள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 130 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும், பா.ஜ.க 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஒடிஷாவில் பா.ஜ.க 72 இடங்களிலும், பி.ஜே.டி 57 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இங்கு இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

                          தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள்

ஏழு கட்டங்களாக நடந்த இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் திகதி வாக்குப் பதிவு நடந்தது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x