– கொலை செய்ய முற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் வழக்கு
நேற்றையதினம் (02) காலை கொழும்பு – இரத்தினபுரி வீதியின் தும்மோதர பகுதியில் போக்குவரத்து நெரிசலின் போது புகையிரத பாதையில் தனியார் பயணிகள் பஸ் ஒன்று ஆபத்தான முறையில், பாதுகாப்பற்ற முறையில் செலுத்திய பஸ் ஒன்றின் சாரதி எம்பிலிபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், குறித்த சாரதி கைது செய்யட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரான சாரதி மீது, கொலை செய்ய முற்பட்டமை, சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் செலுத்தியமை, நச்சு போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தியமை, அரசு சொத்துகளை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் அவிசாவளை பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு எதிர்வரும் ஜூன் 06ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியே பாதுகாப்பற்ற முறையில் இவ்வாறு பயணித்திருந்தார்.
சந்தேகநபர் 45 வயதான எம்பிலிபிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் 4 மாத காலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரான சாரதி குறித்த பஸ்ஸை இவ்வாறு புகையிரத தண்டவாளத்தின் மீது செலுத்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.