தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் கடந்த மூன்ற தசாப்தங்களில் முதல் முறையாக அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ள ஆளும் ANC கட்சி புதிய அரசொன்றை அமைப்பதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததாக நேற்று (02) அறிவித்தது.
கடந்த புதனன்று இடம்பெற்ற தேர்தலில் 99.91 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் 40.2 வீத வாக்குளை வென்றுள்ளது. 2019 தேர்தலில் 57.5 வீத வாக்குகளை வென்ற அந்தக் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக உள்ளது.
‘மக்களின் விருப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையான மற்றும் திறம்பட ஆட்சி புரியக்கூடிய அரசொன்றை அமைக்க ஏ.என்.சி. உறுதிபூண்டுள்ளது’ என்று ஆளும் கட்சியின் செயலாளர் நாயகம் பிகில் இம்பலுலா நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவு தென்னாபிரிக்க வரலாற்றில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தென்னாபிரிக்கா நெல்சன் மண்டேலா தலைமையில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று ஜனநாயக அட்சிக்கு திருப்பிய 1994 தொடக்கம் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையை வென்று வந்தது குறிப்பிடத்தக்கது.