பாகிஸ்தானில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 28 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணம் செய்த 28 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேர் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து குவெட்டாவுக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது வாஷூக் என்ற நகரில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சாலை விபத்துகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இந்த சம்பவத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உதவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்த குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம், அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், முக்கியமாக பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள மலைப்பகுதிகளில் சாலை விபத்துக்கள் நடப்பது பொதுவானவை எனக் கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற விபத்தில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.