Friday, June 14, 2024
Home » சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும் ரபாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும் ரபாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

ஆயிரக்கணக்கான மக்கள் தப்பி ஓட்டம்

by mahesh
May 29, 2024 7:00 am 0 comment

ரபாவில் அடைக்கலம் பெற்றுள்ளவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 45க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியான நிலையிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இந்த சம்பவம் ஒரு ‘சோகமான விபத்து’ என்று குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘அனைத்து இலக்குகளும் எட்டப்படுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவர நான் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

காசா மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபா மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலிலே பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமானோர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புச் சபை அல்ஜீரியாவின் கோரிக்கையின் பேரில் நேற்று அவசரக் கூட்டத்தை நடத்திய ஐ.நா செயலாளர் நாயகம் அட்டோனியோ குட்டரஸ் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் தாக்குதலால் ‘கொடிய மோதலில் இருந்து அடைக்கலம் பெற்றிருந்த கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’ என்றார்.

‘காசாவில் ஒரு பாதுகாப்பான இடம் கூட இல்லை. இந்தப் பயங்கரம் நிறுத்தப்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், எகிப்து, துருக்கி, கட்டார் என பல நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, ‘ரபாவில் ஏற்கனவே போரிடாத ஒரு மில்லியன் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதோடு போரிடாதவர்களை காயப்படுத்தாமல் இருக்க நாம் கடுமையாக முயன்றாலும் துரதிருஷ்வசமாக ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது’ என்றார்.

ஏற்கனவே ரபா மீதான தாக்குதலை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்தபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ரபா நகரின் வடமேற்காக டால் அல் சுல்தான் பகுதியில் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்களை இலக்கு வைத்து நேற்று நடத்திய செல் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

ரபா நகரில் மேற்கில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

ரபாவில் உள்ள சொரோப் சுற்றுவட்டப்பாதையைச் சூழ இஸ்ரேலிய டாங்கிகள் கடும் குண்டுமழை பொழிந்ததோடு சம காலத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் மற்றும் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களும் தீவிரம் அடைந்திருந்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் ரபா நகர மையத்தை அடைந்திருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. மத்திய ரபா பகுதியில் அல் அவுதா பள்ளிவாசலுக்கு அருகில் டாங்கிகளை காண முடிவதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சுற்றுப்புறங்களை நோக்கி முன்னேறிய இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கு ரபாவின் சுருப் மலைப் பகுதியில் நிலைகொண்டு இரவு முழுவதும் தாக்குதல்களை நடத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுருப் பகுதியில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் கடும் மோதலில் ஈடுபட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றியது தொடக்கம் அதன் டாங்கிகள் ரபா விளிம்புகளில் நிலைகொண்டிருந்ததோடு கிழக்கு மாவட்டங்கள் சிலதில் முன்னேற்றம் கண்டுள்ளன. எனினும் அந்த நகரில் முழு அளவில் அந்தப் படை இன்னும் நுழையவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கில் மோதல்

காசாவில் இஸ்ரேலிய படை நுழையாத ஒரே பிரதான நகராக இருக்கும் ரபாவில் தாக்குதல் உக்கிரமடைந்த நிலையில் அங்கிருக்கும் மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேற ஆரம்பித்துள்ளனர். நேற்று சூரியோதயத்தை அடுத்து டால் அல் சுல்தான் பகுதியில் இருந்து மக்கள் கார்கள், ட்ரக்குகள் மற்றும் கழுதை மற்றும் குதிரை வண்டிகளை பயன்படுத்தி வடக்கை நோக்கி வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

மேற்கு ரபாவின் டால் அல் சுல்தான் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளரான காலித் மஹ்மூம் தமது வேதனையை வெளியிட்டிருந்தார்.

‘எமது கூடாங்களில் குண்டுகள் விழுந்து வருகின்றன. குழந்தைகள் அச்சத்தில் உள்ளார்கள். எனது சுகவீனமுற்ற தந்தையால் இரவில் தப்பிச்செல்ல முடியாது. இஸ்ரேல் கூறுவது போல் நாம் பாதுகாப்பு வலயத்திலேயே இருக்கிறோம். யாரும் எம்மை காப்பற்ற முன்வராவிட்டார் நாம் உயிர் ஆபத்தில் இருக்கிறோம்’ என்றார்.

இந்நிலையில் ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பித்த கடந்த மூன்று வாரங்களில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமிலும் கடும் மோதல் நீடிருத்து வருகிறது. இந்தப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக போர் ஆரம்பித்த தொடக்கத்திலேயே இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டபோதும் அங்கு மீண்டும் படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹமாஸின் மூன்று படைப்பிரிவுகள் ஜபலியா முகாமை காத்து வருவதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை இஸ்ரேலிய இராணுவம் தற்போது புரிந்துகொண்டிருப்பதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட போர் ஆய்வுக்கான நிறுவனம் மற்றும் சீ.டீ.பி. அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசா மற்றும் காச நகரில் இருந்து ஹமாஸின் 12 படைப் பிரிவுகளும் செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேலிய போர்க்கால அமைச்சரவை முன்னதாக தொடர்ந்து கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு காசாவில் கமால் அத்வான் மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 46 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 36,096 ஆக உயர்ந்துள்ளது.

ரபா எல்லைக் கடவையை கைப்பற்றிய இஸ்ரேல் அங்கிருந்து உதவிகள் வருவதை முடக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 12 நாட்களாக சுகாதார நிலையங்களுக்கு மருந்து விநியோகங்கள் கிடைக்கவில்லை என்றும் குறிப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய் மருந்துகள் இன்றி சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. இணைப்பகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

‘காசா மக்கள்தொகையில் ஐந்து வீதமானவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்து அல்லது காணாமல்போயுள்ளனர். குறைந்தது 3,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, 10,000 சிறுவர்கள் அனாதையாக்கப்பட்டு, 17,000 சிறுவர்கள் பாதுகாவலர் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை இழந்திருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.’

பலஸ்தீன அங்கீகாரம்

இதேவேளை முன்னர் அறிவித்தது போன்று ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள் நேற்று பலஸ்தீன நாட்டை உத்தியோகபூர்வமான அங்கீகரித்தன. தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ், ‘பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என்பது வரலாற்று நீதிக்கான விடயம் மாத்திரமன்றி, நாம் அனைவரும் அமைதியை காண வேண்டுமானால் கட்டாயமான ஒன்றாகவும் உள்ளது’ என்றார்.

‘அமைதியான எதிர்காலத்தை அடைவதற்கான ஒரே சாத்தியமான வழி என நாம் அனைவரும் அங்கீகரிக்கும் தீர்வை நோக்கி நகர்வதற்கான ஒரே வழி இதுதான்: பலஸ்தீன அரசு இஸ்ரேல் அரசுடன் அமைதி மற்றும் பாதுகாப்புடன் அருகருகே இருக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா. அங்கத்துவ நாடுகளில் 140க்கும் அதிகமான நாடுகள் பலஸ்தீன நாட்டை அங்கீகரித்தபோதும் ஐரோப்பாவில் சொற்ப நாடுகளே அந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT