Sunday, June 16, 2024
Home » கல்வி மறுசீரமைப்பு ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படும்

கல்வி மறுசீரமைப்பு ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்படும்

by mahesh
May 29, 2024 12:40 pm 0 comment

கல்வி மறுசீரமைப்பு ஊடாக இலங்கை முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட காலப்பிரச்சினை தீர்க்கப்படும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஸ்ரீ பழனி மண்டபத்தில் தென்மராட்சிப் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பள்ளி ஆசிரியர்கள் பலவருடங்களாக குறைந்த வருமானத்தோடு அடுத்த தலைமுறைக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இது வடக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல இலங்கை முழுவதும் உள்ள நிலைமை. நாம் வடக்கு மாகாணசபையிலிருந்த காலத்தில் தான்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு முதன்முறையாக ஆறாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டது.

முன்பள்ளிக் கல்வியை கல்விக் கட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என நாம் மூன்று வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். முன்பள்ளிக் கல்வியை கல்விக் கட்டமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது மிக அவசியம். அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டம் கூட உருவாக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளுடைய அடிப்படை முன்பள்ளிக் கல்வி தான். எனவே முன்பள்ளியில் சரியான பாடத்திட்டங்களை உள்ளெடுக்காவிட்டால் அதனை பின்னர் சரி செய்வது கடினமாகிவிடும். இதனைக் கருத்திற்கொண்டே கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை ஊடாகவே முன்பள்ளி ஆசிரியர்களுடைய நீண்டகால பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு மாத்திரமான பிரச்சினை என்றால் இதனை எப்போதோ தீர்த்திருக்க முடியும். இது தேசிய பிரச்சினை. எனவே தான் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதில் எனது ஒத்துழைப்பும் அழுத்தமும் எப்போதும் இருக்கும்.

அத்தோடு யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் செயற்றிட்டமொன்றையும் மிக விரைவாக முன்னெடுக்கவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(சாவகச்சேரி விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT