துணை மருத்துவ சேவை குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள 317 பேர் தம்மை சேவையில் இணைக்க கோரி மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களிடமே இவர்கள் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 2021.01.01ஆம் திகதியிடப்பட்ட 2,209 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி குடும்பநல உத்தியோகத்தர் பதவி ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைக்கு பலர் தோற்றியிருந்தனர்.
இவர்களுள் 2,836 பேர் தகுதியுடையவர்களாக கருதி 2021.12.22ஆம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் பெயர் பதிவேற்றப்பட்டது. அதன் பின்னர் 2022.02.09ஆம் திகதி வெட்டுப்புள்ளி மதிப்பெண் அடிப்படையில் தகுதியுடையவர் பெயர்ப்பட்டியல் பயிற்சியில் இணைப்பதாக சுகாதார அமைச்சின் வலையமைப்பில் பதிவேற்றப்பட்டது. 2022.09.05ஆம் திகதி முதல் குழுவிலிருந்து வெட்டுப்புள்ளி மதிப்பெண் முன்னுரிமை அடிப்படையில் பயிலுநர்கள் தெரிவுசெய்யப்பட்டு, பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டனர். மீதி பயிலுநர்கள் இரண்டாவது குழுவில் பயிற்சிக்கு உள்வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த 03 வருடங்கள் 1,317 பயிலுநர்கள் பயிற்சிக்கு காத்திருக்கையில் தற்போது கடந்த 08ஆம் திகதி சுகாதார அமைச்சின் வலையமைப்பில் குடும்பநல உத்தியோகத்தர் பயிற்சியின் இரண்டாம் பகுதி தெரிவுப்பட்டியலில் 1,000 பயிலுநர்கள் தெரிவாகியுள்ளனர்.
இவரைகாலமும் இப்பயிற்சிக்கான விதிமுறைகளை தவறாது பேணியும் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டும் காத்திருந்த மீதி 317 பயிலுநர்கள் பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாமை தமக்கு கவலையாக உள்ளது. ஆகவே இந்தத் தொழிலுக்கு தம்மையும் கவனத்தில் கொண்டு இரண்டாம் பகுதி பயிற்சி ஆரம்பமாகும் காலத்தில் உள்வாங்க பரிந்துரை செய்யுமாறு, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாச்சிக்குடா விசேட நிருபர்