Home » ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலியின் இரு நூல்களின் வெளியீட்டு விழா
மலையக கலை கலாசார இரத்தின தீப சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன் பார்வையில்...

ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலியின் இரு நூல்களின் வெளியீட்டு விழா

by mahesh
May 29, 2024 6:00 am 0 comment

அக்குறணை ஐடெக் கல்வி நிலையம், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்திய எமது பிராந்திய செய்தியாளர் ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி) குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபத்தில் இயக்குநர் ஐ. ஐனுடீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாணம் முன்னாள் முதலமைச்சர், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, மனித அபிவிருத்தி தாபனம், இயக்குனர், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் , சமய, சமூகப் பேச்சாளர் நெலும் ஆடைக் காட்சியகத்தின் உரிமையாளர் தேசமானிய முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியதுடன் நூல் பற்றிய அறிமுகத்தை பேராசிரியர் எம். எஸ்.எம். அனஸ், நயவுரையினை கவிஞர் ரா. நித்தியானந்தன், ஆசிரியை சர்மிளாதேவி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நூலின் முதல் சிறப்புப் பிரதிகளைப் தொழிலதிபர் அல்ஹாஜ் டி. எம். எஸ். நிஸாஹிர், மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், சந்திரவதனா ரட்ணராஜ குருக்கள் பெற்றுக் கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலீல், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் றாசிக், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமிலா தாவூத், திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள எழுத்தாளர்கள் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இங்கு உரையாற்றும் போது;

எழுத்தாளர் இக்பால் அலி, சாய்ந்தமருதூரில் பிறந்து பறகஹதெனியாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர். கண்டி நகருக்கு அடிக்கடி வந்து இலக்கியத்திற்கு அவர் செய்கின்ற பங்களிப்பு சாமானியமானதல்ல. பறஹகதெனியாவில் இருந்து தினமும் வந்து போவது என்றால் மிகவும் கஷ்டமான விசயம். அதே போன்றுதான் அவருடைய இரட்டைச் சகோதரர்களாக நாம் பார்க்கின்ற இராமன். இந்த இரண்டு பேரும் கண்டி மாநகரின் இலக்கியத்துறையை வாழ்வித்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. இக்பால் அலி ஓயாத ஊடகப் பணியில் இருந்து கொண்டு எப்படித்தான் படைப்பிலக்கியம் செய்கிறாரோ என்பது ஒரு கஷ்டமான விசயம். அது ஒரு சாதாரண விசயமல்ல. எனக்கு பாராளுமன்ற வாழ்க்கையில் இந்த வருடத்தோடு 30 வருடமாகின்றன.

இந்த 30 வருடத்திலும் இக்பால் அலியினுடைய ஊடகப் பணியானது நான் ஆரம்பத்திலே கண்டிக்கு வந்ததில் இருந்து அக்கால கட்டத்தில் டிஜிட்டல் ஊடகம் அவ்வளவு பிரசித்தமாக இருக்க வில்லை. அச்சு ஊடகம், வானொலி, தொலைக்காட்சி ஊடகம் ஆகியவற்றின் மூலம்தான் அனுப்ப வேண்டும். டிஜிட்டல் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் இருந்து பெரிய பங்களிப்பை மிக அமைதியாகச் செய்து கொண்டிருப்பவர். அவருடைய இலக்கியப் பணியில் அவருடைய புத்தகங்களை திறனாய்வு செய்வதற்கு அழைக்கப்பட்டவன் அல்ல. இருந்தாலும் ஒரு விசயத்தை நான் சொல்ல வேண்டும்.

அண்மையில் இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்த இறையருள் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். இறையருள் கவிமணி கா. அப்துல் கபூருடைய கவிதைகள் மட்டுமல்ல. அல்குர்ஆனைக் கூட அவர் தமிழ் கவிதையாக மாற்றி இலகு தமிழில் நாவில் தவழுகிற விசயமாக குர்ஆனை மாற்றிய ஒரு பெருந்தகை அவர். அவருடைய கவிமாண்புகள் பற்றிப் பேசுவது அல்ல விசயம். அவர் குழந்தை இலக்கியம் ஊடாக அதை விடவும் மகத்தானது. குழந்தை இலக்கியம் படைப்பது இலேசான விசயமல்ல. வளர்ந்தவர்களுக்கு தாங்களே குழந்தைகளாக மாறி கவிபடைப்பது என்பது ஒரு வித்தியாசமான கலை.

அவருடைய மற்றைய நூலில் பேராசியர் எம். ஏ. நுஹ்மான் அவர்கள் நூலைப் பற்றி திறனாய்வு செய்துள்ளார். பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான், ஒரு நல்ல தமிழ் கவிஞர். இக்பால் அலி, சாய்ந்தமருது பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் பக்கத்து ஊர் கல்முனை. எம். ஏ. நுஹ்மான் அவர்களுடைய கவிதையினை நான் இந்தியாவில் கொண்டு சென்று வாசித்தேன். அவ்வளவு பெருமையாக இருந்தது. எங்கள் நாட்டுப் பேராசிரியர் ஒரு கவிஞர். அவருடைய கவிதையை இந்திய அரங்கில் வாசித்தேன். அதனை ஏன் வாசித்தேன் என்றால் அவ்வளவு தூரம் சமகாலத்தில் முஸ்லிம்களுடைய மிகப் பெரிய அவலமாக இருக்கின்ற காஸா மண்ணில் நடக்கின்ற இந்தப் படுகொலைகள், படுபாதகச் செயல்களுக்கு பதில் இருக்கும் வகையில் அவர் எழுதிய ஒரு கவிதை. அதாவது ஒரு இஸ்ரேலிய அமைச்சர் பலஸ்தீனர்களை மனிதர்களை விலங்குகளாகக் கூறி அவர்கள் அத்தனை பேரையும் விட்டு வைக்கக் கூடாது என்று பேசுகிறான். அதற்கு பதிலளிக்கும் வகையில் கவிதையிலே பதிலிருக்கிறார் எம். நுஹ்மான். விலங்குகளைப் பழியாக்காதீர்கள் என்ற தலைப்பிலே அவர் எழுதியிருந்தார்.

அக்குறணையில் உள்ள கஸாவத்தை ஆலிம் அவர்களுடைய ஆளுமை சாதாரண விசயமல்ல. கசாவத்தை ஆலீம் அப்பா பற்றி இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். அவருடைய படைப்புக்களை வெளிக் கொண்டு வந்தமாதரி இல்லை. மிகப் பெரிய பணி இருக்கிறது. அவற்றை எல்லாம் மீள் பதிப்பு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.. எச். ஏ. ஹலீம் உரையாற்றும் போது;

மத்திய மலை நாட்டில் இலக்கிய விடயங்களை நினைவூட்டும் போது மத்திய மலை நாட்டின் இலக்கியங்கள் எழுத்துத் துறை பற்றிப் பேசும் போது அறிஞர் எம். சி. சித்திலெப்பை, கசாவத்தை ஆலிம் அப்பா புலவர், அருள்வாக்கி அப்துல் காதர் போன்றோரை ஞாபகமூட்டாமல் பேச முடியாது என்று நினைக்கின்றேன். இவர்கள் 1800 களில் ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக முஸ்லிம் எழுத்தாளர்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

சித்திலெப்பை எழுத்துப் பணி முஸ்லிம்களுடைய தேசிய மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் வித்திட்டவை. சித்திலெப்பை ஆய்வு மன்றம் அவருடைய எழுத்துக்களை மென்மேலும் தேடுதல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். சித்திலெப்பையின் எழுத்துத் துறை மேலும் ஆய்வு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கு மார்க்க வழிகாட்டியாக இருந்தவர் அக்குறணையைச் சேர்ந்த கஸாவத்தை ஆலிம் அப்பா அவர்கள். 19 ம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய மாமேதையாக திகழ்ந்தார். இவருடைய எழுத்துப் பணிகளை உயிர்ப்பிக்க வேண்டிய பணி நம்முன் இருந்து கொண்டிருப்பது என்பதையும் இத்தருணத்தில் ஞாபகமூட்டுகின்றேன்.

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் உரையாற்றும் போது;

நமக்குத் தொழில் கவிதை. நாட்டுக் உழைத்தல் என்று பாரதி பாடினான். பாரதி கவிதையோடு நின்று விடவில்லை கவிதைகளை எழுதுவதும் புத்தகங்களை எழுதுவதும் மாத்திரம் அல்ல. நாட்டுக்கு உழைத்தல். நாம் வாழுகின்ற எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்காக எங்களுடைய பங்களிப்பை எங்களுடைய வகிபாகத்தை செலுத்தல் என்று பொருள்படுகின்றது. ஆகவே இந்த இரண்டும் ஒன்று சேர்ந்து செல்ல வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் கவிஞர்கள் உண்மையான கவிஞர்களாக இருக்க முடியும். எழுத்தாளர்களாக இருக்க முடியும். கட்டுரை ஆசிரியர்களாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் நண்பர் இக்பால் அலியின் இந்தப் புத்தக வெளியீடு இந்த அக்குறணை மாநகரில் நடைபெறுவதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்த இக்பால் அலி என்பவர் எங்களுக்கு ஓர் எழுத்தாளராக ஒர் ஊடகவியலாளராக மற்றும் அல்ல அவர் அதற்கப்பால் நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது ஏற்கெனவே இராமன் சொன்னது போல் தங்கக் கட்டிகளை தன்னுடைய பையில் சுமந்து வந்தார். ஆனால் இவர் இப்பொழுது பித்தளைக் கட்டியாக வைத்து இருக்கின்றார். நான் அவரைச் சந்திக்கும் போது அந்தச் சந்தர்ப்பத்தில் பித்தளைக் கட்டிகள் இருக்க வில்லை. புத்தகங்கள் தான் கையிலே இருந்தன.

அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட்.எம். ரிஸ்மி உரையாற்றுகையில்;

இக்பால் அலி எம்மில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறார். இவருடைய படைப்புகளின் நீலம் அகலம் மிகவும் பிரமாண்டம் ஆனது. இவரோடு நான் பத்து வருடங்களில் நாடளாவிய ரீதியில் 50,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளேன். எனவே ஒருவரோடு பயணம் செய்தால் அவருடைய உண்மையான குணாதிசயங்கள் விளங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் அவர் பற்றிய விடயங்களை கூறாமல் இருக்க முடியாது.

ஊடகவியலாளர் என்ற வகையில் இலக்கியம் ஆன்மீகம், தேசப் பிரச்சினைகள், நுட்பமான தகவல்கள், குடும்ப ஆக்கத்திற்கான கருத்துக்கள். தனிமனிதனை முன்னேற்றுதல் போன்ற பல செய்திகள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடங்களிலும் அவர் செய்து வராத நாட்கள் இல்லை. இப்பொழுது கூட கமராவைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். பத்திரிகை வாசிப்பவர்களுக்குத் தான் தெரியும். அக்குறணையில் பத்திரிகைக் கடை மூடப்பட்டதற்கான காரணம்.

அக்குறணையில் பத்திரிகை வாசிப்பவர்கள் இல்லை என்பதினாலாகும். நீங்கள் பத்திரிகை வாசிப்பவர்களை ஊக்குவித்து விட்டு மீண்டும் அந்தக் கடையைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இக்பால் அலி, கல்முனை சாஹிரா கண்டி சித்திலெப்பை கல்லூரிகளின் பழைய மாணவர். அவர் அறிஞர் சித்திலெப்பையின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அறிஞர் சித்திலெப்பபையின் வரலாற்றை முதன் முதலில் எழுதியர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ. இக்பால். அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர் அமீன், பேராசிரியர் எம். எஸ்.எம். அனஸ் போன்றவர்கள் எழுதினார்கள். இக்பால் அலியை நாங்கள் ஆரம்பத்தில்’ ஓர் ஊடகவியலாளராக மாத்திரம்தான் பார்த்தோம். ஆனால் அவரிடம் எங்களை பிரமிக்க வைக்கும் இவ்வளவு பெரிய விசயம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

நான் எல்லோரையும் எழுதுங்கள் என்று சொல்லுவேன். அவர் என்னையே எழுதுங்கள் என்று சொல்லுவார். இக்பால் அலி பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்த் துறை விரிவுரையாளர் கலாநிதி செ. சுதர்சனனுடன் இணைந்து மருதூர்க் கொத்தனின் படைப்புக்களை ஒன்று திரட்டி செம்பதிப்பை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மத்திய மாகாண முன்னாள்முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உரையாற்றும் போது; இக்பால் அலி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நன்கு அறிவேன். இன்று வாசிப்பெல்லாம் டிஜிட்டல் யுகத்திற்கு மாறிச் சென்று கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் இக்பால் அலி இரு நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும். எனவே இத்தகைய முயற்சிகளுக்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி இரா அ.இராமன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT