Home » அமானா வங்கி முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 734.5 மில்லியனை பதிவு செய்தது

அமானா வங்கி முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 734.5 மில்லியனை பதிவு செய்தது

- 2024 ஆம் ஆண்டை சிறந்த நிதிப் பெறுபேறுகளுடன் ஆரம்பிப்பு

by mahesh
May 29, 2024 11:30 am 0 comment
  • Q1 PAT பெறுமதியில் 91%வளர்ச்சியைப் பதிவு
  • முற்பணங்கள் 8% உயர்வு

அமானா வங்கி தனது சிறந்த நிதிப் பெறுபேறுகளை தொடர்ந்தும் பதிவு செய்து, முதல் காலாண்டில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 734.5 மில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவு செய்திருந்த வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 423.5 மில்லியனாக காணப்பட்டதுடன், இது 73% வருடாந்த அதிகரிப்பாகும். அதுபோன்று வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 422.2 மில்லியனாக காணப்பட்டதுடன், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூ. 220.7 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 91% வருடாந்த வளர்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வருமானம் ரூ. 4.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி என்பதுடன், இதில் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மீட்சி கொள்கைகளின் பிரகாரம் சந்தையில் ஏற்பட்ட வங்கி வீதங்களின் வீழ்ச்சி பங்களிப்பு செய்திருந்தது. எவ்வாறாயினும், ஆரோக்கியமான நிதியளிப்பு எல்லைப் பெறுமதியான 4.5% ஐ பேணியிருந்ததுடன், தேறிய நிதியளிப்பு வருமானம் ரூ. 1.8 பில்லியனாக முன்னேறியிருந்தது.

வங்கியின் கட்டண மற்றும் தரகு வருமானம் மற்றும் வியாபார வருமானம் வருடாந்த அடிப்படையில் முறையே 15% மற்றும் 11% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 285.9 மில்லியன் மற்றும் ரூ. 275.1 மில்லியனாக பதிவாகியிருந்தன. அதனூடாக வங்கியின் மொத்த தொழிற்படு வருமானம் ரூ. 2.4 பில்லியனை எய்தியிருந்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்த மதிப்பிறக்க கட்டண ஒதுக்கங்களைத் தொடர்ந்து, வங்கியின் தேறிய தொழிற்படு வருமானம் ரூ. 2.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது வருடாந்த அடிப்படையில் ஆரோக்கியமான 36% வளர்ச்சியை பிரதிபலித்திருந்தது.

வங்கி ஆரோக்கிமான வருமானத்துக்கான செலவு விகிதத்தை 48% ஆக கொண்டிருந்தது. இதனூடாக நிதிச் சேவைகளின் மீது VAT வரிக்கு முன்னரான தொழிற்படு இலாபம் 51% வருடாந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், ரூ. 993.6 மில்லியனை எய்தியிருந்தது. வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பு ரூ. 571.4 மில்லியனாக காணப்பட்டதுடன், சகல வரிகளுக்கும் முன்னரான வங்கியின் தொழிற்படு இலாபம் 58% ஆக காணப்பட்டது.

அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வங்கியியல் மாதிரிக்கான ஏற்றுக் கொள்ளல் அதிகரித்துள்ள நிலையில், வங்கியின் முற்பணங்கள் 8% எனும் தொகையினால் அதிகரித்து ரூ. 97 பில்லியனாக பதிவாகியிருந்தது. உள்நாட்டு நாணய வைப்புகள் ரூ. 1 பில்லியனுக்கு உயர்வாக அதிகரித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தப் பிரிவு ரூ. 132 பில்லியனாக காணப்பட்டது. வெளிநாட்டு நாணய வைப்புகளுக்கு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வு இதில் தாக்கம் செலுத்தியிருந்தது. வங்கியின் முற்பணப் பிரிவு தொடர்ந்தும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், தொழிற்துறையின் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதமான 1.6% ஐ கொண்டிருந்தது. முதல் காலாண்டில் வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 161.6 பில்லியனாக பதிவாகியிருந்தது.

காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேற்றை பதிவு செய்திருந்த நிலையில், அமானா வங்கியின் ROE மற்றும் ROA ஆகியன முறையே 7.8% மற்றும் 1.8% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. 2023 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி முறையே 6.2% மற்றும் 1.2% வளர்ச்சியை எய்தியிருந்தன. 2024 மார்ச் 31 ஆம் திகதியன்று, அமானா வங்கியின் Common Equity Tier 1 மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் முறையே 15.6% மற்றும் 18.3% ஆக பதிவாகியிருந்தன. இவை ஒழுங்குபடுத்தல் ஆகக்குறைந்த தேவைப்பாடான 7% மற்றும் 12.5% போன்றவற்றை விட உயர்வானதாகும்.

வங்கியின் முதல் மூன்று மாத கால பெறுபேறுகள் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த ஆண்டிலும் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டிருந்த சூழலில், அமானா வங்கி தொடர்ந்தும் உறுதியான நிதிப் பெறுபேறுகளை முதல் காலாண்டில் பதிவு செய்திருந்தது. இந்த உறுதியளிப்புடனான ஆரம்பம் என்பது, எதிர்கால வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கு உறுதியான அடித்தளமாக அமைந்துள்ளது. அமானா வங்கியின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டை உறுதி செய்வதில் அமானா வங்கியின் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒப்பற்ற ஈடுபாடு போன்றவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “முதல் காலாண்டில் பதிவாகியிருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளினூடாக, 2024 ஆம் ஆண்டை நோக்கிய அமானா வங்கியின் உறுதியான தோற்றப்பாட்டை உறுதி செய்திருந்தது. அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மற்றும் மக்களுக்கு நட்பான வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பு என்பது, இலங்கை மத்திய வங்கியின் மீட்சிக்கான முயற்சிகளுடன் பிணைந்ததாக அமைந்திருப்பதுடன், வங்கியின் முறையான இடர் முகாமைத்துவ கட்டமைப்புடன் ஒன்றித்ததாக காணப்படுகின்றது. இவை எமது வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்திருப்பதுடன், வருடம் முழுவதிலும் இந்நிலை தொடரும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது அணியினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு நான் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எமது பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியினூடாக அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டி வளர்ச்சிக்கு வித்திடுவதற்கான எமது நோக்கத்துக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

2023 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முன்னெடுத்திருந்த உரிமை வழங்கலினூடாக, வங்கி ரூ. 20 பில்லியனை மூலதனமாக திரட்டியிருந்தது. அதனூடாக, ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாட்டை மேம்படுத்தி நிவர்த்தி செய்திருந்ததுடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து, வங்கியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கும் பங்களிப்புச் செய்திருந்தது.

பங்குதாரர் மற்றும் ஒழுங்குபடுத்தல் அனுமதியின் பிரகாரம், ஏற்கனவே காணப்படும் 10 சாதாரண பங்குகளை 1 சாதாரண பங்காக ஒன்றிணைக்கும் வங்கியின் தீர்மானம் பற்றி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஒன்றிணைப்பினூடாக வங்கியின் வெளிப்படுத்தப்பட்டுள்ள மூலதனத்தில் எவ்விதமான மாற்றமும் காணப்படாது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT