Home » சொல்வதைச் செய்யும் யுகம் உருவாக்கப்பட வேண்டும்

சொல்வதைச் செய்யும் யுகம் உருவாக்கப்பட வேண்டும்

by Prashahini
May 29, 2024 1:24 pm 0 comment

எமது நாட்டின் அரசியலமைப்பு மேற்கத்திய மைய அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தே செயல்படுகிறது. இதற்கு மேலதிகமாக பொருளாதாரம், சமூகம், சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் மத உரிமைகள் உள்ளடக்கப்பட வேண்டும். சுகாதாரம் என்பது அடிப்படை உரிமையாக அமைந்திருந்தால், மாதவிடாய் சுழற்சி பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைத்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உலக மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு “பெண்மையை கொண்டாடுவோம் வாருங்கள்” என்ற தொனிப்பொருளில் வெள்ளவத்தை மிராஜ் ஹோட்டலில் நேற்று (28) நடைபெற்ற பெண்களின் மாதவிடாய் வறுமை தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள 54 இலட்சம் குடும்ப அடிப்படையிலான குடும்ப அலகுகளில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 53 இலட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இருப்பதாக Advocata நிறுவனம் கண்டறிந்துள்ளது. இவர்களில் 50% பேர் மாதவிடாய் வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாதவிடாய் வறுமை என்பது மாதவிடாய் சுழற்சிக்குத் தேவையான சாதனங்களை அணுகாமல் அல்லது பெற முடியாமல் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பதை இது சுட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த கருவிகள் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கான அணுகல் வரையறுக்கப்படுவதால், இந்த மாதவிடாய் வறுமை காரணமாக ஒரு பெண்ணின் அதிகபட்ச இலக்குகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இழக்கப்படுகிறது. 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது இது தொடர்பான உண்மைகளை முன்வைத்த போது நான் விமர்சிக்கப்பட்டேன். மாதவிடாய் வறுமையைப் போக்க தேவையான துவாய்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மருத்துவ ரீதியான முக்கியத்துவத்தை தான் புரிந்து கொண்டதன் வெளிப்பாடாகவே இந்த தலைப்பு குறித்து பேச காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாதவிடாய் வறுமை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கலாம். கல்வித் துறையிலும் அதனை உரிய காலத்துக்கு பூரணப்படுத்த முடியாது கடுமையான வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இதற்கு தண்ணீர் வசதி, சுகாதார வசதிகள், மாதவிடாய் முகாமைத்துவதற்கான சிறந்த சுகாதார சேவைகள் இருக்க வேண்டும். இந்த வசதிகள் போதியளவு இல்லாததால் பல பெண்கள் பாடசாலைகளுக்கு செல்லக்கூட தயங்குகின்றனர். இக்காலத்தில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. இதனால் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினை எமது சமூகத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு முத்திரை குத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் தொழிலாளர் துறையில் 33 முதல் 35% வரை பங்களிக்கின்றனர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான சுகாதார வசதிகள், சுத்தமான தண்ணீர் வசதிகள் மற்றும் மாதவிடாய் துவாய்களை அகற்றும் வசதிகள் குறித்து ஒரு நாடாக, சமூகமாக உணர்வுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.

இந்த மாதவிடாய் வறுமையை ஒழிப்பதற்கு நடைமுறை ரீதியிலானதொரு, வலுவான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இந்த தலைப்பில் நாங்கள் பல கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதால், பேச்சுக்கு அப்பால் சென்று நடைமுறை திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. பிரான்ஸில் சில பகுதிகளில், ஸ்கொட்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகள் இந்த வசதிகளை இலவசமாக வழங்குகின்றன. கென்யா இதற்கான வரிகளை முற்றாக நீக்கி இதை இலவசமாக வழங்கி வருகிறது. இவர்களால் இதைச் செய்ய முடிந்தால், எமது நாட்டாலும் இதைச் செய்ய முடியும். இதற்கு அரசியல் உறுதிப்பாடு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

சுதந்திரம், நியாயம், நீதி என்பனவற்றின் அடிப்படையில் மனித இனத்தில் உள்ள அனைவரும் கண்ணியத்துடன் வாழும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். இது பேனப்படாமையினாலயே மாதவிடாய் சுழற்சி தொடர்பான உண்மைகள் குறித்து புரிதலை உள்வாங்காது சமூகத்தால் முத்திரை குத்தப்படும் நிலையை எட்டியுள்ளது.

இந்த மாதவிடாய் காலத்தில் சிலர் சமூகத்தை விட்டு மறைந்தால், பின்வாங்கினால், பல்வேறு ஆரோக்கியமற்ற பாதுகாப்பற்ற கருவிகளை உபயோகிக்க நேரிட்டால், சமுதாயத்தில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழும் வாய்ப்பை இழக்க நேரிடும். எனவே இதற்கு தொடர்ந்தும் இடம் வழங்காது சமூகத்தில் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் வாழுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சொல்வதைச் செய்யும் யுகம் உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT