Sunday, June 16, 2024
Home » ஒலிம்பிக் தகுதி பெற யுபுன் இறுதிக்கட்ட முயற்சி: மேலும் போட்டிகளில் பங்கேற்பு

ஒலிம்பிக் தகுதி பெற யுபுன் இறுதிக்கட்ட முயற்சி: மேலும் போட்டிகளில் பங்கேற்பு

by Rizwan Segu Mohideen
May 28, 2024 8:23 am 0 comment

ஒலிம்பிக் தகுதி பெற முயன்று வரும் தெற்காசியாவின் அதிவேக வீரரும் 2022 பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதப்பம் வென்றவருமான இலங்கை குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் அடுத்த ஐந்து வாரங்களில் நான்கு தொடக்கம் ஐந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவிருப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் தரப்படுத்தலின்படி அபேகோன் தற்போது 95 ஆவது நிலையில் உள்ளார். ஒலிம்பிக் தகுதிக்கான கடைசி காலக்கெடுவான ஜூன் 30க்குப் பின்னர் 56 வீரர்களே பாரிஸ் செல்ல தகுதியை உறுதி செய்வார்கள்.

இந்நிலையில் ஒலிம்பிக் தகுதிக்காக போட்டியிட்டு வரும் அபேகோன் இதுவரை நான்கு சர்வதேச போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் ஜெர்மனியில் நடைபெற்ற போட்டியில் 10.15 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்ததே சிறந்ததாக உள்ளது. இந்தப் போட்டியில் அவர் முதல் இடத்தையும் பெற்றார்.

என்றபோதும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிக்கு ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 10.00 விநாடிகளுக்குள் நிறைவு செய்திருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டுபாயில் நடந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 விநாடிகளில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்த யுபுன், ரோம் ஓட்டப்போட்டியில் 10.21 விநாடிகளில் போட்டித் தூரத்தை முடித்து நான்காவது இடத்தையே பிடித்தார்.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் பிலிப்பைன்ஸில் நடைபெறும் கிரோன் பிரீ மெய்வல்லுனர் போட்டிகள் இரண்டில் பங்கேற்க யுபுன் திட்டமிட்டுள்ளார்.

யுபுனுக்கு வெளிநாடு ஒன்றில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியை நிரூபிக்க முடியாமல்போனால் அவர் ஜூன் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் 102 ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு இலங்கை தடகள வீர, வீராங்கனைகள் எவரும் இன்னும் தகுதி மட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT