Sunday, June 16, 2024
Home » அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘லடாக்’!

அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘லடாக்’!

by Rizwan Segu Mohideen
May 27, 2024 6:24 pm 0 comment

சமீப காலங்களில் ஊடகங்களில் அடிக்கடி ஒலித்த ஒரு பெயா் தான் லடாக். இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள லடாக், வரலாற்று ரீதியாக 2019 வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்தது.

இந்திய பாராளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 31 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீா் மாநிலத்திலிருந்து லடாக் பிரிக்கப்பட்டு இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாக நிறுவப்பட்டது.

இதன் காரணமாக, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு தனியான சட்டமன்றம் இருக்கும் என்றும், லடாக் என்ற யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பெரும்தடையாக தீவிரவாதம் இருந்து வருகிறது. பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான காஷ்மீா் தொடா்பான சச்சரவு, பாகிஸ்தானின் அழுத்தத்தினால் தீவிரவாதமாகவும் சிவில் யுத்தமாகவும் வெடித்தது. இதன் காரணமாக இப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
என்ற போதிலும், லடாக் முஸ்லிம்கள் தீவிரவாத தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்தனா்.

காஷ்மீா் போராட்டத்தின் விளைவாக ஜம்மு காஷ்மீா் மாநிலத்தோடு இணைந்திருந்த லடாக்கும் பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஜம்மு காஷ்மீா் மாநில அரசுகள் லடாக்கை ஓரம் கட்டி வந்தன. லடாக் மக்கள் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தில் நம்பிக்கையிழந்து இருந்தனா்.

லடாக், லேஹ் மற்றும் கார்கில் என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. லடாக்கின் மிகப்பெரிய மாவட்டம் லேஹ் ஆகும், லேஹ் நகரில் பௌத்தா்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதற்கடுத்து பெரிய மாவட்டமாக கார்கில் இருக்கிறது. கார்கில் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

லடாக்கை பிரிக்கும் இந்திய அரசின் இந்த நடவடிக்கை லடாக்கிற்கு தனது நேரடி நிர்வாகத்தையும், கட்டுப்பாட்டையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவை பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட லடாக்கின் லேஹ் மாவட்டத்தில் வாழும் மக்கள் கொண்டாட்டத்துடனும் நம்பிக்கையுடனும் ஏற்றுக் கொண்டனா்.

லேஹ் மாவட்டத்தில் சிந்து, சியோக், நுப்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. கார்கில் மாவட்டத்தில் சுரு, திராஸ், ஜான்ஸ்கர் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் உள்ளன. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மக்கள் அதிகம் வாழக் கூடிய பகுதிகளாக உள்ளன. மலைச் சரிவுகளில் மேய்ச்சல் தொழில் செய்யும் சாங்பா நாடோடிகள் வாழ்ந்து வருகின்றனா்.

லடாக்கில் பௌத்தம் மற்றும் இஸ்லாம் ஆகியவை பிரதான மதங்களாக உள்ளன. இங்கு முஸ்லிம்கள் 46.4% சதவிகிதம் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையினா் ஷியா சிந்தனைப்பள்ளியைச் சார்ந்தவா்களாவா். பௌத்தர்கள் 39.65% வீதமானவா்கள் இங்கு வாழ்கின்றனா். இவா்கள் திபெத்திய பௌத்தத்தைச் சார்ந்தவா்களாவா். இங்கு இந்துக்கள் 12.1%, வீதமாகவும் பிற மதத்தைச் சார்ந்தவா்கள் 1.85% வீதமாகவும் உள்ளனர்.

லடாக்கின் இரண்டு மாவட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, லேஹ் மாவட்டத்தில், பௌத்தா்கள் 66.4% விகிதத்தைக் கொண்ட பெரும்பான்மையாக வாழ்கின்றாா்கள். இங்கு முஸ்லிம்கள் 14.3% விகிதம் இருக்கின்றனா். 17.1% விகிதத்தில் ஹிந்துக்கள் இருக்கின்றனா். கிறிஸ்தவம் மற்றும் ஏனைய மதத்தைச் சார்ந்தவா்கள் 2.2% விகிதத்தில் இருக்கின்றனா்.

கார்கில் மாவட்டத்தைப் பொறுத்தவரை 76.9% என்ற விகிதத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதோடு, 15.5% என்ற விகிதத்தில் பௌத்தா்கள் வாழ்கின்றனா். 8.2% ஹிந்துக்கள் வாழ்கின்றனா்.

லேஹ் மாவட்ட மக்கள், ஜம்மு காஷ்மீா் மாநிலத்திலிருந்து தமது மாவட்டத்தைப் பிரிக்கும் நடவடிக்கையை தங்கள் பிராந்தியத்திற்கு அதிக சுயாட்சி மற்றும் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து லடாக்கைப் பிரிக்க இந்திய அரசு எடுத்த முடிவை, வளங்களை பகிர்ந்து கொள்வதில் லடாக் மக்களுக்கிருந்த நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான சாதகமான ஒரு தீா்வாக அவா்கள் பார்க்கின்றனா்.

இந்தியாவின் வடக்கு எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள லடாக், உலகின் மிகக் குளிரான பகுதிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு இது இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக லடாக்கின் வீதிகள் தடைப்படுகின்றன. பனிப்பொழிவு காலத்தில் விவசாய வயல்கள் உறைந்து விடுகின்றன. பயிர்களை வளர்க்கவோ பராமரிக்கவோ முடியாத நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது.

லடாக் இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். இதன் கலாச்சாரம் மற்றும் வரலாறு திபெத்தின் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

தனித்துவமான கலாச்சாரங்களைக் கொண்டுள்ள லடாக், பிரமிக்கத்த, இயற்கையின் வசீகரத்தையும், ஆன்மீக பாரம்பரியத்தையும் கொண்ட பிரதேசமாகும்.

முதல் நூற்றாண்டில், குஷான் பேரரசு இப்பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்திய காலத்தில் பௌத்தம் முதன் முதலில் லடாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல நூற்றாண்டுகளாக, புத்த மதம் மற்ற மதங்களின் சவால்களை எதிர்கொள்ளாமல் லடாக்கில் செழித்து வந்துள்ளது. இருப்பினும், 15 ஆம் நூற்றாண்டளவில், லடாக்கில் இஸ்லாம் பரவத் தொடங்கியதன் பின்னா் அதன் மத, கலாசார நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டது.

காஷ்மீர், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம் வர்த்தகர்கள் இடம்பெயர்ந்ததன் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இந்த வணிகர்கள் லடாக்கிற்கு வந்து குடியேற்றங்களை ஏற்படுத்தி, பௌத்த பெண்களை திருமணம் செய்து உள்ளூர் பௌத்த மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினர். இது லடாக்கின் மத மற்றும் கலாச்சார இயக்கவியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியில் பௌத்தத்துடன் இஸ்லாமும் வேரூன்றத் தொடங்கியது.

பௌத்தா்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழக் கூடிய லடாக்கில், மத சகிப்புத்தன்மையும், நல்லிணக்கமும் முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகங்களுக்கிடையில் அமைதியையும், கூட்டுறவுறவையும் பேணக் கூடிய பிராந்தியமாக இது அமைந்துள்ளது.

லடாக்கில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களின் சகவாழ்வு, மத நல்லிணக்கத்திற்கும், பரஸ்பர மரியாதைக்கும், அர்ப்பணிப்புக்கும் ஒரு சிறந்த சான்றாகும். இங்குள்ள தனித்துவமான சமூக நல்லிணக்கம் லடாக்கின் ஒட்டுமொத்த அமைதியான சூழ்நிலைக்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளது. இது மதங்களுக்கு இடையேயான புரிதலுக்கும், ஒத்துழைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு மத பண்டிகைகள் மற்றும் மரபுகள் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களால் அனுசரிக்கப்படுகின்றன. மத பன்முகத்தன்மையை பாதுகாக்கும் லடாக் மக்களின் அணுகுமுறை அவா்களிடையே ஒற்றுமையையும், பரஸ்பர புரிதலையும் வளர்க்க உதவியுள்ளது.

பல நூற்றாண்டுகளாக லடாக்கின் கலாச்சாரம் மற்றும் மத மரபுகளில் திபெத் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத்திய அகதிகள் இப்பகுதியில் அடைக்கலம் பெற்றதன் காரணமாக இவா்களின் செல்வாக்கிற்கு லடாக் உள்ளாகியது. 1959 ஆம் ஆண்டு திபெத் மீதான சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து திபெத்திய அகதிகள் பெருமளவில் இந்தியாவுக்குள் வரத் தொடங்கினா்.

லடாக்கியர்கள் மற்றும் திபெத்தியர்களின் கலாச்சார பாரம்பரியம் பல ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறது, இதனால் லடாக் பெரும்பாலும் “லிட்டில் திபெத்” என்று குறிப்பிடப்படுகிறது.

தலாய் லாமாவின் சமீபத்திய லடாக் விஜயம், திபெத்தியர்களினால் லடாக்கில் பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டியது. பல நூற்றாண்டுகளாக இப்பிராந்தியத்தின் சமூக, கலாச்சார மற்றும் மத கட்டமைப்பை வடிவமைப்பதில் பௌத்தமும் இஸ்லாமும் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

லடாக், ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருந்த காலத்தில் மிகவும் ஓரம் கட்டப்பட்டு பின்னடைவை சந்தித்திருந்தது. தற்போது இது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு , புதுதில்லியில் உள்ள மத்திய அரசால் நேரடியாக ஆளப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, கலாச்சார அடையாளத்தைப் பேணுவதற்கும், மதங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை களைந்து சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் ஒரு சந்தா்ப்பத்தை லடாக் பெற்றிருக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT