“தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளைப் புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது” என சைந்தவி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.
எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் நிகழ்ந்தது அல்ல. மேலும் ஆதாரமற்ற முறையில் ஒருவரை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு.நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருட நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், “தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பதோடு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
சைந்தவி, பின்னணி பாடி வருகிறார். ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இவர்கள் இருவரும் அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சில யூடியூப் மற்றும் செய்தி நிறுவனங்களில் தவறான தகவல்கள் பரப்பபட்டதற்கு எதிராக இருவரும் தற்போது கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.