நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பழமையான பொருளாதார முறையினால் தான் இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புதிய பொருளாதார முறைமையை உருவாக்குவதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இரணைமடு, நெலும் பியச மண்டபத்தில் நேற்று (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் சந்தர்ப்பமும் இதன்போது வழங்கப்பட்டது.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
இங்கு பலர் என்னிடம் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர். இப்பிரதேச இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு வருமான வழிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் அவசியம்.
முதலில் யாழ்ப்பாணத்தில் அல்லது தேசிய மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். கடந்த நான்கு வருடங்களாக எமது நாட்டில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. கோவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டன. இத்தகைய கடினமான நேரத்தில் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன்.
இன்று நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதுதான். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் 2023-2024 திட்டத்தை நான் இப்போது ஆரம்பித்துள்ளேன். நாடு வங்குரோத்தடைந்துள்ளதை உலகமே ஏற்றுக்கொண்டது. இப்போது நாடு வங்குரோத்து நிலையில் இல்லை என்று இப்பொழுது நாம் கூற வேண்டும்.
நாடு வங்குரோத்தாகும் பட்சத்தில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் நம்முடன் இணைந்து செயல்படாது. நாட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தொழில் செய்பவர்களுக்கு போதிய சம்பளம் கிடைப்பதில்லை. வேலையில்லா திண்டாட்டம் ஏன் ஏற்பட்டது? பழைய பொருளாதார முறையினால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது.
தாய்லாந்து, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் ஏற்றுமதி பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றன. பணம் இல்லாததால் கடன் வாங்குகிறோம். இப்போது கடனை திருப்பிச் செலுத்த வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவேன். ஆனால் நாம் அதிக கடன் எடுத்தால் நாடென்ற ரீதியில் மேலும் நெருக்கி நிலை உருவாகும். அரச தொழில்களை வழங்கவும் பணம் இல்லை.
இனிமேலாவது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் காலத்தில் தொழில் வழங்குவதாக அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்கின்றனர். இது பணமில்லாத வெறும் பணப்பையுடன் பயணம் செய்வது போன்றது. இந்த நிலையை நாம் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். புதிய பொருளாதார அமைப்பை உருவாக்கி தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
சுற்றுலா வளர்ச்சியடையும் போது தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன. நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை, குறைந்தது 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும். இந்த நாட்டிற்கு வரும் ஒரு சுற்றுலாப் பயணி ஒரு நாளைக்கு 150 டொலர்களை மட்டுமே செலவிடுகிறார். ஆனால் அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 400-500 டொலர்களைப் பெறுவதற்கான பொறிமுறையை நாங்கள் உருவாக்க வேண்டும். சில இளைஞர்கள் கிரிப்டோ பரிவர்த்தனைகள் செய்கின்றனர். அங்குள்ள விதிகளை தளர்த்துமாறு கூறுகிறார்கள்.
விவசாயத்தை மேம்படுத்துவது நமது மற்றொரு குறிக்கோளாகும். கடந்த காலங்களில் பயிர்களை ஏற்றுமதி செய்தோம். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்றுமதித் துறை நலிவடைந்தது. நமது நிலத்தை பயன்படுத்தி நவீன விவசாயத்தை உருவாக்க வேண்டும். கிராமத்திற்கு ஸ்மார்ட் விவசாயம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்.
கொழும்பில் ஸ்மார்ட் விவசாயம் மேற்கொள்ள முடியாது. தூரப்பிரதேச கிராமங்களில் இதைச் செய்யலாம். ஒரு நாடு முன்னேற, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க வேண்டும். அடுத்ததாக, நமது கைத்தொழில் துறையை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் முதலீட்டு வலயங்களை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கணினி கல்வியையும் மேம்படுத்த வேண்டும். இப்பயணத்தைத் தொடர்வோம். இங்கே சிக்கிக் கொண்டிருந்தால் உலகை வெல்ல முடியாது. நான் இளைஞனாக இருந்த காலத்தில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொருளாதார ரீதியில் முன்னணியில் இருந்தது. ஆனால் தற்போது சிங்கப்பூர், மலேசியா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளன. இப்படியே பார்த்துக்கொண்டிருந்தால், ஆப்கானிஸ்தான் நம்மை விட முன்னேறலாம்.
எனவே, பழமையான பொருளாதாரப் போக்கையும், அரசியல் போக்கையும் மாற்ற வேண்டும். தொழில் வாய்ப்புகளை வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திட்டத்தை, என்னால் மறந்து விட முடியாது.
அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். நாம் செல்ல வேண்டிய புதிய பாதையை முன்னோக்கிக் கொண்டு செல்வது அவசியம். 2022 இல் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், இவ்வளவு குறுகிய காலத்தில் மீண்டு வரும் என்று யாரும் நம்பவில்லை.
இந்நிலை பாதுகாக்கப்பட்டு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இம்முறை வெசாக் கொண்டாட்டத்தைக் காண வழமையை விட அதிகமான மக்கள் கொழும்புக்கு வந்திருந்தனர். யாழ்ப்பாணத்திலும் இவ்வருடம் வெசாக் கொண்டாடப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கான மாற்றத்தை நான் செய்து வருகிறேன். அதை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு உங்களிடம் உள்ளது.
தொழில் கேட்பதை விட யார் ஆட்சிக்கு வந்தாலும் எப்படி தொழில் வழங்குவது என்ற கேள்வியை கேளுங்கள். பொய்க் கூச்சல் போடுபவர்களிடம் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்காது. உங்களது பிரச்சினைகளை முறையாக தீர்க்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இளைஞர் விவகாரம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேதீர, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றப் பிரதிப் பணிப்பாளர் ஐயாத்துரை தவேந்திரன் மற்றும் இளைஞர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.