விசா தாமதத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணியின் ஆரம்ப வரிசை வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ அமெரிக்கா சென்று டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணியுடன் இணைந்துள்ளனர்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணி கடந்த மே 14 ஆம் திகதியே அமெரிக்கா சென்றபோதும் விசா கிடைக்காததால் மெண்டிஸ் மற்றும் பெர்னாண்டோ அப்போது அணியுடன் செல்ல முடியாமல் இருந்தனர்.
பயிற்சி பெறுவதற்காகவே இலங்கை அணியினர் முன்கூட்டியே அமெரிக்கா சென்றதோடு அவர்கள் வடக்கு கரோலினாவில் மொரிஸ்வில்லே மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணியினர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அமெரிக்கா சென்று அங்குள்ள சூழலை பழகும் வகையில் பயிற்சிகளை ஆரம்பித்தது தொடர்பில் இலங்கை தேர்வுக் குழு தலைவர் உபுல் தரங்க ஆறுதலை வெளியிட்டுள்ளார். இலங்கை அணி அடுத்த வாரத்தில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஆடவுள்ள நிலையில் அனைத்து வீரர்களும் உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஆடுகளங்கள் மந்தமாக இருப்பதாகவும் துடுப்பாட்ட வீரர்களுக்கு அது சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டி20 உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிற்திய தீவுகளில் எதிர்வரும் ஜூன் 01 தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி எதிர்வரும் மே 28 ஆம் திகதி பிளோரிடாவில் உள்ள பிரோவட் கௌண்டி அரங்கில் நெதர்லாந்து அணியுடனும் தொடர்ந்து மே 31 ஆம் திகதி அதே மைதானத்தில் அயர்லாந்து அணியுடனும் இலங்கை அணி இரு பயிற்சிப் போட்டிகளில் ஆடவுள்ளது.