அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் சம்புக்களப்பு பிரதேசம் முக்கியம் வாய்ந்தது. அட்டாளைச்சேனை – ஆலம்குளம் பிரதான பாதையாக விளங்கும் சம்புக்களப்பு பிரதேசத்திலயே வளம்கொழிக்கும் நெற்காணிகள் உள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச நெற்காணிகளின் பிரதான வடிச்சல் பாதையும் இதுவே.
நீண்டகால வரலாற்றைக் கொண்ட சம்புக்களப்புப் பிரதேசம் இன்று பொதுமக்களின் விருப்பத்திற்கமைவாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. எதிர்காலத்திலும் அபிவிருத்திகளுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளமை தெளிவாகும்.
அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்திய ஐ வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், சம்புக்களப்பு வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தில், குறித்த வீதி, சீரான போக்குவரத்துக்கேற்ற வகையில் அகலமாகக்கப்பட்டு, காபர்ட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டது.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியிலிருந்து, மேற்கு நோக்கி அட்டாளைச்சேனை பாவங்காய் ஜலால்டீன் வீதி, மீலாத்நகர், சம்புக்களப்பு, சம்புநகர், ஆலம்குளம், விவசாயக் கிராமங்களை ஊடறுத்து அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான வீதியை சென்றடையும் இவ்வீதியில், சீரான மின்சார வசதியின்றி பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெற்காணிகளுக்கு போக்குவரத்துச் செய்யும் பிரதான பாதையாகவும், நெல் உட்பட விவசாய அறுவடைகளை வீடு கொண்டு வந்து சேர்க்கும் அல்லது சந்தைப்படுத்தும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும் இவ்வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்றுச் சாலையினால் ஆலம்குளம் கிராமத்துக்கான பஸ் போக்குவரத்துச் சேவையும் இவ்வீதியில் ஏற்கனவே ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கொள்களமும் இப்பிரதேசத்திலயே அமைந்துள்ளது.
இவ்வாறு முக்கியத்துவமிக்க இவ்வீதியில் மின்சார வசதியின்மையினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர், இரவுவேளைகளில் காட்டு யானைகளின் அச்சமும் எதிர்கொள்ளப்பட்டது.
தற்பொழுது, 1.6 கிலோமீற்றர் நீளமான வீதிக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் 2.8 மில்லியன் ரூபா செலவில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு, தெருமின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைச் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற மின்சாரம் வழங்கல் வேலைத்திட்டத்தினை தேசிய காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவரும், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இவ்வைபவத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சின் ஓய்வுநிலை செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, உதவிப் பிரதேச செயலாளர்கள், அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.ஹனிஸ், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், அரச உயரதிகாரிகள், தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முக்கியத்துவமிக்க இவ்வீதி மின்சார இணைப்புக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், பிரதேச சபைச் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்து நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
முகம்மட் றிஸான்
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)