– 2017 ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி
– பெண்கள் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதி
– பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனி ஆணைக்குழு
– ஜூன் இறுதிக்குள் ஆண், பெண் சமத்துவ சட்ட மூலம் நிறைவேற்றப்படும்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் சுகாதார பராமரிப்பு விசேடத்துவ நிலையம் (Centre of Excellence for Women’s Care) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ரூ. 5,320 மில்லியன் (ரூ. 532 கோடி) செலவில் இவ்வசதி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார வசதிகளை வழங்கும் பிரதான வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை மாவட்டத்தில் 150,000 இற்கும் அதிகமான மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.
இன்று திறந்து வைக்கப்பட்ட மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பு மையம், வடக்கில் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் பிரசவத்தை மேம்படுத்துவதுடன், புதிதாகப் பிறந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் வடமாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்தும்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, மகளிர் சுகாதார சேவைகளுக்கான சிறப்பான நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை அவதானிப்பதிலும் இணைந்துகொண்டார்.
பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான் இந்த திட்டத்தை ஆரம்பித்தாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியால் அந்தப் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை ஆனால் இன்று வெற்றிகரமாக நிறைவுசெய்து பெண்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த தனியான ஆணைக்குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த ஜூன் மாத இறுதிக்குள் ஆண், பெண் சமூகத்தன்மை சட்டமூலம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்கு பாராளுமன்றத்தில் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
இது 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், கொரோனா தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக மகளிர் சுகாதார சேவைகளுக்கான இந்த சிறப்பு மையத்தின் பணிகளை முடிக்க முடியவில்லை. ஆனால் இன்று அதை வெற்றிகரமாக முடித்து பெண்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று கிளிநொச்சி நகரில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கி இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன், இப்பிரதேசத்தில் வலுசக்தித் திட்டங்களை மீள உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் இவ்வாறான செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் உள்ள காணிப்பிரச்சினைகள் மற்றும் காணாமற்போனோர் பிரச்சினை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களின் சுகாதார சேவைகளுக்கான சிறந்த நிலையத்தை இந்நாட்டு பெண்களுக்காகச் செய்யப்படும் ஒரு சிறந்த பணியாக அறிமுகப்படுத்த முடியும். பெண்களுக்காக மேலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ. சுமந்திரன், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் திருமதி பொனி ஹோபேக் ஆகியோரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.