கொழும்பு பங்குச்சந்தை,தெற்காசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் சந்தை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அபாரமான வளர்ச்சியை காட்டியுள்ளது. இதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தை மூடப்படுவதற்கு முன்னைய தினத்தில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 131.87 புள்ளிகள் அல்லது 1.08 சதவீத வளர்ச்சியை அடைந்ததுடன், அன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மதிப்பும் 12,348.84 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் நாளின் போது 58.18 புள்ளிகள் அல்லது 1.61 சதவீதத்தால் அதிகரித்து, நாளின் வர்த்தகத்தின் முடிவில், அதன் மதிப்பு 3,666.89 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினம் 1.46 பில்லியன் ரூபா பரிவர்த்தனை புரள்வு பதிவாகியுள்ளது. உள்நாட்டு கொள்வனவுகள் 1.41 பில்லியன் ரூபாவாகவும் உள்நாட்டு விற்பனை 1.35 பில்லியன் ரூபாவாகவும், வெளிநாட்டு கொள்வனவுகள் 49 மில்லியன் ரூபாவாகவும் வெளிநாட்டு விற்பனை 106 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன.
கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, LOLC ஹோல்டிங்ஸ், NDB வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியன அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்ணில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஹற்றன் நேஷனல் வங்கி (ரூ. 147 மில்லியன்), நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (ரூ. 98 மில்லியன்) மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (ரூ. 80 மில்லியன்) ஆகியவை அன்றைய சாதாரண பரிவர்த்தனைகள் மூலம் புரள்வதில் அதிக பங்களிப்பைச் செய்திருந்தன.