பொருளாதார ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியப் பொருளாதாரம் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது.
2022-2030 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6% வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்று நிதி பகுப்பாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடுகளின்படி, பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தற்போது பிரிட்டனை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பல நூற்றாண்டுகள் பிரிட்டனின் காலனி நாடாக இருந்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பின்னரான தனது வளர்ச்சிப்பாதையில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை விட முன்னேறி செல்வது, அதன் வளர்ச்சிக்கான புதிய நகர்வுககளையும், முயற்சிகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தி வந்த பிரிட்டனை மிஞ்சி, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்வதற்கான இந்தியாவின் நகர்வு குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டளவில் இந்தியா 10 டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொடும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் என்று அந்நாட்டின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கூறியிருந்தார்.
2014 முதல், இந்தியா அதன் பொருளாதார வளர்ச்சியில் 7 நாடுகளைக் கடந்து முன்னேறியுள்ளது. உலகளாவிய ரீதியில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூச்சு திணறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவால் தனது உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க முடிந்துள்ளது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியின் போதும், ரஷ்யா உக்ரைன் போர் நெருக்கடி நிலையின் போதும், இந்தியாவால் தனது பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கத்தில் வைத்துக் கொள்ள முடிந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடமாகும்.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உக்ரைன்-ரஷ்யா மோதலால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது, பணவீக்கத்தை வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் இருந்து வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளுடன் முரண்பட்டுக் கொள்ளாமல் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் எரிபொருளை இந்தியா கொள்வனவு செய்து வந்தது. இந்த நிகழ்வு, இந்தியப் பொருளாதாரத்தை தளரவிடாமல் கட்டமைப்பதற்கு வலு சேர்த்தது.
பொருளாதார நெருக்கடியின் தீவிரம் இந்திய மக்களின் சமையலறைகளில் பெரிதாக உணரப்படாததற்கு ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்யும் இந்தியாவின் துணிச்சலான முடிவு காரணமாக இருக்கலாம்.
மேலும், இந்தியா தான் அடைந்து வரும் சாதனைகளின் விளைவுகளையும், பயன்களையும் அண்டை நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை பின்பற்றி வருகிறது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் போது, இந்தியா உலகத் தலைமைத்துவத்திற்கான ஒரு பிரதான பங்கை நிரூபித்ததை யாராலும் மறுக்க முடியாது. உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ‘தடுப்பூசியனால் நட்புறவு’ என்ற பெயரில் தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது.
தடுப்பூசி இராஜதந்திரம் என்ற புதுமையான கருத்தாக்கத்தின் மூலம், இலங்கை உட்பட உலகின் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்கியதன் மூலம் இந்தியா தனது உலகளாவிய உதவிக்கான கட்டமைப்பை மனிதநேய அடிப்படையில் விரிவுபடுத்தியது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த இலங்கையை அந்த வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க நிபந்தனையின்றி நேசக்கரம் நீட்டிய முதல் நாடு இந்தியா.
இலங்கை அரசாங்கம் 51 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக அறிவித்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய சந்தா்ப்பமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அவசர உதவிகளை இந்தியா உடனடியாக வழங்கியது. கடன் பரிமாற்றங்கள் ஊடாக உணவு, மருந்து மற்றும் எரிபொருளை அவசரகால அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை இதன் மூலம் இலங்கை பெற்றுக் கொண்டது.
கடந்த 2022 ஜனவரி மாதத்தில், இலங்கை நிதி நெருக்கடியால் தவிக்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில், இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடி கடனாக வழங்கியது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்களின் போது அதனை நிவா்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனை வழங்கியது. நெருக்கடி நிலை மேலும் அதிகரித்த போது, இந்த கடன் வசதியை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இந்தியா விரிவுபடுத்தியது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டமைப்பதில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் பிரதானமானதாகும்.
தமது அன்றாட தேவைகளுக்காக இலங்கை மக்கள் இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருக்கின்றனர். இதனைத் தவிர்த்து உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா இலங்கையுடன் இணைந்து பல திட்டங்களை முன் வைத்துள்ளது.
இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்காக இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கையின் பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும், இந்திய அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து இந்நாட்டில் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.
வரலாற்று ரீதியாக, இரு நாடுகளும் வலுவான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளைப் பகிர்ந்து கொண்டு வந்துள்ளன. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்புகள், உட்கட்டமைப்பு மேம்பாடு முதல் மனிதாபிமான ரீதியிலான உதவிகள் வரை நீண்டு செல்கின்றன.
இந்தியாவின் பன்முக ஆதரவு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
– ஆதவன்