பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட்சம்பளம் 1700 ரூபா என்பதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரது கையெழுத்துடன் இவ்வர்த்தமானி விடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வர்த்தமானியின்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்க வேண்டும். ஆனாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள் என தொழிற்சங்க நடவடிக்கைகளையும் அகிம்சை வழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நாட்சம்பள அதிகரிப்பு குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை பல தடவைகள் முன்னெடுத்துள்ளன.
இருந்தும் கூட பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைப்படி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றன. இது நியாயமற்ற செயற்பாடு என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
அதேநேரம், நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அந்தந்த மட்டங்களுக்கு ஏற்ப நிவாரணங்களும் சலுகைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. குறிப்பாக அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இவ்வாறான நிவாரணங்கள், சலுகைகள் எதுவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கென வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இவ்விடயத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக ரூபா 1700 வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலிய மேதின பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டதோடு, இதன் நிமித்தம் விஷேட வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் விஷேட வர்த்தமானி மேமாதம் முதலாம் திகதி தொழில் ஆணையாளரால் விடுக்கப்பட்டது.
இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஏதாவது ஆட்சேபனைகள் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதாயின் அதற்கென முதலாளிமார் சம்மேளனத்தினருக்கு 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த 15 நாட்கள் காலப்பகுதிக்குள் முதலாளிமார் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
இவ்வாறான சூழலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ரூபா 1700 ஆக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி தொழில் அமைச்சின் செயலாளரது கையெழுத்துடன் மற்றொரு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் வரவேற்று பாராட்டியுள்ளனர்.
ஆனாலும் அரசாங்கம் குறிப்பிடுவது போன்றோ விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்படியோ தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க முடியாதென, சில தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்திடம் முறைப்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்புலத்தில் இச்சம்பள உயர்வு வர்த்தமானியை நடைமுறைப்படுத்தும் வகையில் மூன்று கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (22) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமும் அளித்துள்ளது.
பொருளாதார உறுதி நிலைப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சு, தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மதிப்பிடுதல் அவசியமானது.
இவ்வாறு மதிப்பிடப்படும் சம்பளத்தை வழங்கவென ஒவ்வொரு தோட்ட நிறுவனமும் கொண்டுள்ள திறனை ஆராயவும் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் பலவீனமான முகாமைத்துவத்துடன் செயற்படும் நிறுவனங்களின் குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்குத் தேவையான வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சில விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் எந்தவொரு தோட்ட நிறுவனமும் இந்த சம்பள உயர்வை வழங்கத் தவறினால், அத்தகைய தோட்ட நிறுவனங்களுடன் செய்துகொண்ட காணி குத்தகை ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக்கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் மூன்று கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளது.
ஆகவே இந்நடவடிக்கைகள் அனைத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பள உயர்வை 1700.00 ரூபாவாக பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக செயற்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என உறுதிபடக் கூறலாம்.