இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ISIS உறுப்பினர்களென்ற சந்தேகத்தில் கைதான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவுகளின் பணிப்பாளர்கள் தலைமையிலான குழுவை பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் நியமித்துள்ளதாகவும், அவர் கூறினார்.
இந்த 4 இலங்கையர்களும் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், இவர்களை விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரில், நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொட்ட நௌபரென அழைக்கப்படும் நியாஸ் நௌபர் என்பவரின் மகனும் அடங்கியுள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள்
- நீர்கொழும்பு பெரியமுல்லையைச் சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத்
- கொழும்பு கிராண்ட்பாஸைச் சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான்
- கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் பாரிஷ்
- கொழும்பு 13 ஐச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன்