Home » காசாவில் போர் தீவிரம்: பலஸ்தீனத்திற்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம்

காசாவில் போர் தீவிரம்: பலஸ்தீனத்திற்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம்

by sachintha
May 23, 2024 7:38 am 0 comment

காசாவில் ஏழு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.

அயர்லாந்து பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சிமொன் ஹரிஸ் நேற்று (22) அறிவித்த நிலையில் நோர்வே மற்றும் ஸ்பெயின் நாடுகளும் இதே முடிவை எடுத்துள்ளன.

‘அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் தாம் பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவிக்கிறோம்’ என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரிஸ் குறிப்பிட்டார்.

‘இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பல நாட்டு தலைவர்கள் மற்றும் சகாக்களுடன் நான் பேசினேன். எதிர்வரும் வாரங்களில் இந்த முக்கிய படியில் மேலும் பல நாடுகள் எம்முடன் இணையும் என்று நான் உறுதியாக உள்ளேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் அந்த மக்களுக்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஒரே நம்பகமான வழி இரு நாட்டுத் தீர்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் மே 28 ஆம் திகதி பலஸ்தீனத்தை அயர்லாந்து உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக்கல் மார்டீன் எக்ஸ் சமூகதளதிற்கு தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினும் எதிர்வரும் மே 28 ஆம் திகதி பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர், ஒஸ்லோவில் இருந்து இந்த அறிவிப்பை விடுத்தார்.

‘ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்திருக்கும் போருக்கு மத்தியில், அமைதி மற்றும் பாதுகாப்புடன் பக்கத்து பக்கத்தில் வாழும் இரு நாட்டு தீர்வாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க மாற்று வழி ஒன்றை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டி உள்ளது’ என்று ஸ்டோர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிப்பை அடுத்து இஸ்ரேல் அவசர ஆலோசனைகளுக்காக அயர்லாந்து மற்றும் நோர்வே தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.

‘இது தொடர்பில் இஸ்ரேல் அமைதி காக்காது என்ற உறுதியான செய்தியை அயர்லாந்து மற்றும் நோர்வேயுக்கு வழங்குகிறோம்’ என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவை வரவேற்றிருக்கும் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பலஸ்தீன வெளியுறவு அமைச்சு, முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் காசாவில் கடந்த 2007 தொடக்கம் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரான பசம் நயீம் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டிருப்பதாவது, இந்த நகர்வின் பின்னணியில் பலஸ்தீன மக்களின் ‘தைரியமான போராட்டம்’ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. பலஸ்தீனம் ஐ.நாவில் இணைவதற்கு இந்த மாத ஆரம்பத்தில் பொதுச் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 193 அங்கத்துவ நாடுகளில் 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

முன்னதாக ஐரோப்பாவில் ஒன்பது நாடுகள் மாத்திரமே பலஸ்தீன நாட்டை அங்கீகரித்திருந்தன. இதில் பெரும்பாலான நாடுகள் 1988 இல் சோவியட் முகாமில் அங்கமாக இருந்தபோதே இந்த முடிவை எடுத்திருந்தன. இந்நிலையில் ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வேயின் முடிவு தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது.

பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதற்கு அமெரிக்கா மற்றும் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பத்தை வெளியிட்டபோதும் அது இறுதி எல்லை, ஜெரூசலத்தின் அந்தஸ்து போன்ற பிரச்சினைகளுக்கு உடன்பாடு ஒன்று எட்டப்படும் முன்னர் இடம்பெறாது என்று கூறி வருகின்றன.

ரபாவில் முன்னேற்றம்

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த காசா போர், தற்போது தெற்கு காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மற்றும் வடக்கு காசாவின் ஜபலியா நகரை மையப்படுத்தி தீவிரம் அடைந்துள்ளது.

இதில் இஸ்ரேலிய துருப்புகள் இன்னும் நுழையாத பகுதியாக இருக்கும் ரபாவை நோக்கி படைகள்; முன்னேறி வருவதோடு கடுமையான வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கிருந்து தற்போது 80000க்கும் அதிகமான மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி இருப்பதாக ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரபாவின் இதயப் பகுதியாக இருக்கும் சனநெரிசல் மிக்க மாவட்டம் ஒன்றுக்கு நெருக்கமாக இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று முன்னேறி இருப்பதாக கூறப்படுகிறது.

எகிப்துடனான தெற்கு எல்லை வேலியில் முன்னரை விட மேற்கே புதன்கிழமை புதிய நிலைகளில் டாங்கிகள் நிலைகொண்டிருப்பதாகவும், இப்போது ரபாவின் மையத்தில் யிப்னா சுற்றுப்புறத்தின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் மற்றும் போராளிகள் தெரிவித்தனர்.

‘ஆளில்லா விமானங்கள், ஹெலிகொப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் டாங்கிகளில் இருந்து இரவு முழுவதும் இடைவிடாது இஸ்ரேல் சூடு நடத்தியது’ என்று ரபா குடியிருப்பாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘தென்கிழக்கில் டாங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னேறின. அது இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தபோதும் இரவு முழுவதும் இடம்பெற்ற கடும் தாக்குதலின் கீழ் அவை முன்னேறியுள்ளன’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய காசாவில் அல் சவைதா சிறு நகரில் இடம்பெயர்ந்தவர்கள் வசித்த வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

தெற்கு காசாவின் அல் செய்தூன் பகுதியில் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மத்திய காசாவில் சவைதாக நகரில் இஸ்ரேலிய வான் தாக்குதல் ஒன்றில் வீடு ஒன்றில் இருந்து ஏழு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போதுமான விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலையில் ரபாவில் உதவி விநியோகங்களை இடைநிறுத்தியதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஹமாஸ் போராளிகள் ஒழிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட ஜபலியா நகரில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது.

வடக்கு காசாவில் இயங்கும் கடைசி இரு மருத்துவமனைகளான அல் அவ்தா மற்றும் கமால் அத்வான் மருத்துவமனைகள் இஸ்ரேலின் முற்றுகையில் இருப்பதாகவும் அங்கு 200க்கும் அதிகமான நோயாளர்கள் சிக்கி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜபலியா படை நடவடிக்கையில் ஒட்டுமொத்த குடியிருப்பு பகுதிகளும் அழிக்கப்பட்டு பல டஜன் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக காசாவில் நீடிக்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,600ஐ தாண்டி இருப்பதோடு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT