Home » பன்முகத்தன்மையில் ஐக்கியம் ஏற்படுத்துதல்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பலதரப்பினருடனும் சந்திப்பு

பன்முகத்தன்மையில் ஐக்கியம் ஏற்படுத்துதல்; ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பலதரப்பினருடனும் சந்திப்பு

by sachintha
May 23, 2024 6:42 am 0 comment

மனிதநேயம் மிக்க ஆன்மிகத் தலைவரும், உலக சமாதானத் தூதுவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (ஸ்ரீ குருதேவ்) பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பையேற்று இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார். தொண்டு சேவையை பேரலையாக உருவாக்கி, அதனூடாக உலகின் மிகப்பெரிய தொண்டு சேவை இயக்கமாக ‘வாழும் கலை’ அமைப்பை பரிணமிக்கச் செய்தவர் குருதேவ்.

இதன்மூலம் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களை நேரில் கண்டறிந்தார். அத்துடன் நாடு முழுவதும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடங்கலாக 12 அமைப்புக்களைத் தொடக்கி வைத்தார். இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் இருந்து வந்த ஆயிரமாயிரம் அடியார்கள் அவருடன் இணைந்திருந்தார்கள்.

ஆறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவரை கௌரவிக்கும் விதத்தில் முதல் நாள் கடித உறையொன்றும் வெளியிடப்பட்டது. சந்தோஷம் பரப்பி, பிரத்தியேகமான சுதர்ஷன கிரியைகள், தியானம், தர்க்கரீதியான ஞானம் ஊடாக மக்களை ஐக்கியப்படுத்தி, தனிநபர்களை வலுவூட்டி, சமூகங்களை நிலைமாற்றுவதற்காக அவர் பாடுபடுபவர்.

இலாப நோக்கமின்றி இயங்கும் அவரது ஸ்தாபனங்கள் பால்நிலை, இனம், தேசியம், மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக மனித அடையாளத்தைக் கருதுகின்றன.

‘வாழும் கலை’ அமைப்பில் உலகெங்கிலும் 30,000 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும், 180 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தொண்டர்களும் உள்ளனர். அடியார்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடுகிறது.

திருகோணமலைக்கு விஜயம் செய்த குருதேவ், போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, வாழும் கலை நிறுவனம் நடத்தும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன் உளப்பூர்வமாக அளவளாவினார். அவர் திருக்கோணேச்சரம் சென்று இறைவனைத் தரிசித்தார். குருதேவ் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகக் கிரியைகளிலும் பங்கேற்றார். தமது ஸ்தாபனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சமூக சேவைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி நம்பிக்கைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், பெருமனவு முக்கியஸ்தர்களும், உலகெங்கிலும் இருந்து வந்த அடியார்களும் பங்கேற்ற -‘எக்கமுத்துவ’- என்ற விசேட நிகழ்ச்சியையும் அவர் நடத்தினார்.

பிரதமருடனான சந்திப்பில், பன்முகத்தன்மையில் ஐக்கியத்தை ஏற்படுத்துதல் பற்றியும், வாழ்வின் சூத்திரத்தில் மகிழ்ச்சியை உள்வாங்குவதன் மூலம் இலங்கையை ஐக்கியப்படுத்தல் பற்றியும் குருதேவ் கலந்துரையாடினார். இது தவிர, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் ஆகியோருடனும் அவர் கலந்துரையாடல் நடத்தினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT