Saturday, June 15, 2024
Home » மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by mahesh
May 22, 2024 9:00 am 0 comment

மஸ்கெலியா தினகரன் விசேட, பலாங்கொடை தினகரன், அக்குறணை குறூப், இரத்தினபுரி சுழற்சி நிருபர்கள்

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் கடும் மழை பெய்து வருகின்றது. அத்துடன் அங்கு பலத்த காற்று வீசுவதுடன், பனி மூட்டமும் காணப்படுகின்றது. இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வது குறைவாக உள்ளதை அவதானிக்க முடிவதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மவுஸாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கென்யோன், லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துகொண்டு செல்வதாக, அவற்றின் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மரங்கள் முறிவு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண்டியின் தெல்தோட்டை, கலஹா பிரதேசங்களில் பெய்த கடும் மழையால் தெல்தோட்டை லூல்கோந்துர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், அவ்வீட்டிலிருந்த பாவனைப் பொருட்களும் சேதமடைந்துள்ளன. ஆயினும் அவ்வீட்டிலிருந்தவர்கள் எந்தவித ஆபத்தின்றியும் தப்பியுள்ளனர்.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பலத்த காற்று வீசியதால் வாழை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இரத்தினபுரியில் மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் 10 பிரதேச செயலக பிரிவுகளில் முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்புல்பே, பலாங்கொடை, எஹலியகொடை, கிரியெல்ல, குருவிட்ட, இரத்தினபுரி, அயகம, கலவான, எலபாத உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் மண்சரிவு அபாய நிலைமை இருப்பதாக, தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மண்சரிவு அபாய நிலைமை உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அபாய நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதால் அதற்கு ஈடு கொடுக்க சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக, அம்மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்ன தெரிவித்தார்.

மண் திட்டுகள் சரிவு

நோட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளன.

வாகனச் சாரதிகளுக்கு ஆலோசனை

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருவதுடன், அதிகூடிய பனி மூட்டமும் காணப்படுவதால் வாகனச் சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT