களுத்துறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ் நிலங்கள் மற்றும் பிரதான வீதிகள் பல நீரில் மூழ்கியதுடன் போக்குவரத்து சேவைகள் உட்பட மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, பேருவளை, ஹொறனை, மத்துகம, மதுராவல, பாலிந்தநுவர, பண்டாரகம, புலத்சிங்கள, இங்கிரிய, அகலவத்தை, வலலாவிட்ட மற்றும் மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 27 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் இதன் போது பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட அணர்த்த முகாமைத்துவ அலுவலக உதவி பணிப்பாளர் லெப்டினன்ட் கர்னல் எம்.ஏ.பி.எஸ் பெரேரா தெரிவித்தார்.மேலும் வலலாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வலலாவிட்ட- அவித்தாவ வீதியில் இஹலகந்த பகுதி, புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புலத்சிங்கள – மோல்க்காவ வீதியில் நாலியத்த பகுதி, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெனிகல – அலபொத்துமுல்ல பகுதி நீர் மூழ்கியதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று காலை 5.25 மணியளவில் குக்குலே நீர் மின் நிலையத்தின் ஒரு வான் கதவு திறந்து விடப்பட்டதன் காரணமாகவும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் தாழ் நிலப் பகுதிகள் மேலும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால் பொது மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .
களுத்துறை சுழற்சி நிருபர்