அம்பாறை மாவட்ட செயலகத்தில் மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.எல்.தாஜூடீன் 25 வருட அரச சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தாஜூடீன் விளையாட்டுத்துறைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவராவார். 2000 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராக நியமனம் பெற்ற அவர் 16 வருட சேவையின் பின்னர், சம்மாந்துறை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றினார். இதன்போது நிந்தவூர் பிரதேச பதில் விளையாட்டு உத்தியோகத்தராகவும் பணியாற்றினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மெய்வல்லுனர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையேற்றார். சுமார் 09 வருடங்கள் மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் தனது 60 வயதில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தாஜூடீன் கேரளாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர்களுக்கான விஷேட கற்கைநெறியை பூர்த்தி செய்துள்ளதுடன், விளையாட்டுத்துறையில் தேசிய டிப்ளோமா கற்கைநெறியையும் நிறைவு செய்துள்ளார். விளையாட்டுத்துறை தொடர்பான உயர் கற்கைநெறிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.
கபடி பயிற்றுவிப்பாளராகவும், கபடி, எல்லே, உதைபந்து நடுவராகவும், மெய்வல்லுனர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகவும் அவர் விளங்கினார். ஜூடோ விளையாட்டிலும் அவர் திறமை காட்டினார். அட்டாளைச்சேனை நடுவர் சங்கத் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
அட்டாளைச்சேனை அல்-முனீறா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி பெற்ற தாஜூதீன், உயர் கல்வியை அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) பெற்றுக் கொண்டார். அவர் 1999 ஆம் ஆண்டு விளையாட்டு உத்தியோகத்தராக அமைய அடிப்படையில் நியமனம் பெற்றார்.
அம்பாறை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அவரது சேவையைப் பாராட்டிக் கௌரவித்தனர். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவருக்கான கௌரவத்தினை வழங்கினார். இதுதவிர விளையாட்டுக் கழகங்களும் அவரது பணியைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, பரிசில் வழங்கி கௌரவித்தன.
முகம்மட் றிசான்
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)