Saturday, November 2, 2024
Home » அரசாங்க பாடசாலைகளின் நீர்க் கட்டண சுமை குறைகிறது

அரசாங்க பாடசாலைகளின் நீர்க் கட்டண சுமை குறைகிறது

by mahesh
May 22, 2024 11:20 am 0 comment

ஒரு தேசத்தின் சமூக பொருளாதார மற்றும் ஆரோக்கியத்தில் பாரிய செல்வாக்கினை செலுத்தும் ஒன்றாகவும் தொழில்நுட்பரீதியாக உச்சம் தொற்றுள்ள இன்றைய உலகின் சந்தை பொருளாதாரத்தில் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ள ஒன்றாகவும் நீர் உள்ளது எனலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவின்படி 2.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் உள்ளனர். மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வது ஒரு குறிப்பிட்ட சவாலாகவே காணப்படுகிறது. நீர் வளமானது பல்வேறு காரணங்களால் இன்று மாசடைந்தும் அரிகியும் வருகிறது. அது மாத்திரமன்றி பிராந்தியங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பல்வேறுபட்ட முரண்பாடுகளையும் தோற்றுவித்து வருகிறது.

இலங்கையில் வாழும் மக்களில் 50 சதவீதத்தை கிட்டிய அதாவது 30 இலட்சத்துக்கு மேற்பட்ட பாவனையாளர்களாகிய மக்களுக்கு தனது 34 ஆய்வகங்களின் ஊடாக 24 மணி நேரமும் நேரடி கண்காணிப்பின் அடிப்படையில் சர்வதேச மற்றும் இலங்கையின் தர நிர்ணயங்களுக்கு ஏற்ப சுகாதாரத்துடன் கூடிய நீரை வழங்கி தேசத்துக்கு உயிரூட்டும் அர்ப்பணிப்பு மிக்க பணியினை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொண்டு வருகிறது.

சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறும் அளவுக்கு நீரினால் ஏற்படும் நோய்களும் குறைவடைந்து அதனால் சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் போன்றன மேம்பட்ட நிலையை அடைகின்றன. பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதாக உள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 396 தேசிய பாடசாலைகள் மற்றும் 9,730 மாகாண பாடசாலைகள் உள்ளடங்களாக மொத்தமாக 10,126 பாடசாலைகள் உள்ள நிலையில், அவற்றில் தேசிய நீர் வடிகால் அமைப்புச் சபையின் நீர் வழங்கல் திட்டக் காரியாலயங்கள் உள்ள பிரதேசங்களில் காணப்படும் 4,500 இற்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்க பாடசாலைகளுக்கு வழங்கப்படும் நீருக்கான கட்டணம் அமைச்சரவை தீர்மானத்தின்படி 1988 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளிடமிருந்து அறவிடப்படாமல் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2016 ஆம் ஆண்டிலிருந்து திறைசேரியினால் அரசாங்க பாடசாலைகளின் நீர் பட்டியலுக்கான நிதி சபைக்கு செலுத்தப்படாமையினாலும் பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் கிடைக்க பெறுவதனால் அதிக நீர் விரயம் காணப்பட்டதினாலும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நிர்வாகமே அவர்களின் நீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என சபையினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதன் காரணமாக பல அரசாங்க பாடசாலைகள் தமது நீர்க் கட்டணத்தை செலுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டன.

இவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காக அரசாங்க பாடசாலைகளுக்கு வழங்கப்படும் நீருக்கான கட்டணம் செலுத்துவது சம்பந்தமாக கல்வி அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இருவரும் கூட்டாக இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் சம்பந்தமாக அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பின்வருமாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

01. பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் நீர் என்னும் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் பாடசாலை நடைபெறும் என அனுமானித்து ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 400 லீட்டர் நீரை இலவசமாக வழங்குவதற்கும் அதற்குரிய ஒதுக்கீட்டினை வருடாந்தம் பொது திறைசேரி மூலம் நீர் வழங்கல் அமைச்சுக்கு வழங்குவதற்கும் அதற்கு மேலதிகமாக நீரை பாவிப்பதாயின் அதற்குரிய கட்டணத்தை உரிய பாடசாலை நிர்வாகம் செலுத்த வேண்டும். அத்துடன் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கேற்ப இலவசமாக வழங்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும்.

2. தற்போது நீர் இணைப்பினை கொண்டிராத பாடசாலைகளுக்கு முதலாவது நீர் இணைப்பினை இலவசமாக வழங்குவதற்கு மற்றும் அதற்கு மேலதிகமாக நீர் இணைப்புகள் தேவைப்படின் அதற்கான மதிப்பீட்டுத் தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

3. அதிபர், ஆசிரியர் விடுதிகள் மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றிற்கு வெவ்வேராக நீர் இணைப்பினை பெற வேண்டியதோடு உத்தியோபூர்வ விடுதிகளுக்கான நீர் கட்டணத்தை அதில் குடியிருப்பவர்களினால் மற்றும் நீச்சல் தடாகங்களுக்கான பட்டியல்களை அவற்றை வாடகைக்கு விடுவதன் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானத்திலிருந்து செலுத்துதல்.

அதன் பிரகாரம் 2024 ஜனவரி மாதம் முதல் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைவாக அரசாங்க பாடசாலைகளில் இருந்து நீர்க் கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையத் தரவுகளின்படி பாடசாலை சமூகத்திற்கு வழங்கப்படும் நீரானது சில குறிப்பிட்ட பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர் விடுதிகள், கட்டணம் அறவிடப்படாமல் நடத்தப்படும் நீச்சல் தடாகம், சிற்றுண்டிச் சாலைகள், பாடசாலை வளாகத்திற்குள் இடம் பெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் பாடசாலையில் உள்ள வணக்கஸ்தலங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

அவற்றுக்கான நீர் இணைப்பினை குறித்த பாடசாலை மாணவர்களுக்கு குடிநீருக்காக வழங்கப்பட்ட நீர் இணைப்பிலிருந்து பயன்படுத்த முடியாது. அவற்றிற்காக பிரத்தியோக நீர் இணைப்பினை பாடசாலை நிர்வாகம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். ஏனெனில் அவைகளுக்கான கட்டணங்கள் முற்றிலும் மாறுபட்டதோடு குறித்த இணைப்பிலிருந்து நீரை பயன்படுத்துவோரே அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரின் பெறுமதி மற்றும் அதனை சிக்கனமாக பாவிப்பதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வினை அடிக்கடி நினைவூட்டுவதனால் பாடசாலை சூழலில் நீர் விரயத்தை தடுப்பதோடு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீர் பாவனை முறைக்கு சாதகமான வகையில் மாணவர்களது நடத்தைகளில் மாற்றங்களையும் காணலாம்.

எம்.எஸ்.எம். சறூக் 
சிரேஷ்ட சமூகவியலாளர், 
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x