Saturday, July 13, 2024
Home » வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயிலுக்கு சென்ற சிறுவன் விபத்தில் பலி; 11 பேர் காயம்

வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயிலுக்கு சென்ற சிறுவன் விபத்தில் பலி; 11 பேர் காயம்

by Gayan Abeykoon
May 22, 2024 5:22 am 0 comment

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்துக்கு சென்ற போது இருவேறு விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு இடத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியின் தர்மபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், உழவு இயந்திரத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் பொங்கல் உற்சவத்துக்கு சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளனர். உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாகச் சென்ற உழவு இயந்திரம் தேராவில் வளைவு இடத்தில் திரும்ப முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உழவனூர் பிரதேசத்தைச் சேர்ந்த ர.மிதுசிகன் உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்துள்ள 5 இளைஞர்கள் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைதீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம், மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை யாழ். பண்டதரிப்பு பிரதேசத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் யாழ். நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பூநகரியில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்ணகி அம்மன் கோயில் பொங்கல் உற்சவத்துக்கு பண்டத்தரிப்பிலிருந்து வாடகை பேருந்தொன்றை ஒழுங்கு செய்து பக்தர்கள் சிலர் சென்றனர். உற்சவத்தை முடித்துவிட்டு, மீண்டும் யாழ். நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மேற்படி பேருந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதுடன், இதில் 6 பேர் காயமடைந்து பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு விபத்துகள் தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு விசேட, யாழ்.விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT