Home » பலஸ்தீனம் மீதான யுத்தத்துக்கு சர்வதேசமெங்கும் கண்டனங்கள்!

பலஸ்தீனம் மீதான யுத்தத்துக்கு சர்வதேசமெங்கும் கண்டனங்கள்!

by mahesh
May 22, 2024 11:30 am 0 comment

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தனது பலப்பிரயோகத்தினைக் கொண்டு முன்னெடுத்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. பலஸ்தீனில் மனிதப் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், உலகத்தின் பல நாடுகள் அதற்குத் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இளைய சமூகத்தினர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட, இளைய சமூகத்தினரும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார்கள். இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்தினரும் பலஸ்தீன மக்கள் மீதான நடத்தப்படுகின்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றார்கள். கடந்த ஆண்டின் ஒக்டோபர் ஏழாம் திகதி ஹாமஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பமான மோதல்கள் தற்போது வரையில் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் படுகொலைகளால் இதுவரை 34,305 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,293 பேர் காயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.

இது தவிர ஏழாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் தமது வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகி கட்டட சிதைவுகளுக்குள் சிக்குண்டு மரணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. காஸா பிரதேசம் முழுவதிலும் இருந்து சுமார் 20 இலட்சம் மக்கள் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலையை இஸ்ரேல் ஏற்படுத்தியதால், அந்த மக்கள் எகிப்திய எல்லை ஊடாக நகர்ந்தனர். ஏற்கனவே சனநெரிசல் மிக்க ரபா நகரை நோக்கி அம்மக்கள் நகர்ந்துள்ளதால் தற்போது அங்கு உணவுத் தட்டுப்பாடும் பட்டினி நிலையும் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் கடந்த ஆறு மாத காலங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அடங்கிய கப்பல்களை வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருடாந்தம் அமெரிக்கா வழமையாக அனுப்பி வரும் 3பில்லியன் டொலர் உதவிக்கு மேலதிகமாக இவை அனுப்பப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான மேலதிக நிதி உதவியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் கடந்த மாதம் 14.3 பில்லியன்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்துக்கு முழு அங்கத்துவ அந்தஸ்த்தை பெறுவதற்காக பலஸ்தீன அதிகார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மீது வல்லரசான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்துள்ளதோடு, என்றுமே தாம் இஸ்ரேலுடன்தான் இருப்போம் என்ற செய்தியை அளித்துள்ளது. அடுத்தபடியாக காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டியும், ரபாவில் அதன் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும் தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணையை ஐநாவின் சர்வதேச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கை ‘முற்றிலும் ஆதாரமற்றது’ மற்றும் ‘தார்மீக ரீதியாக வெறுக்கத்தக்கது’ என்று இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா வழக்கு தொடர்ந்ததில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியம். உலகத்தில் உள்ள பல நாடுகள் பஸ்தீனத்துக்கான தென்னாபிரிக்காவின் செயற்பாட்டை வெகுவாகப் பாரட்டியுள்ளன.

அதேநேரம், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருக்கும் தென்னாபிரிக்காவுக்கு ஆதரவையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

– ரஹ்மத் மன்சூர் 
தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 
கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT