நலிந்து துன்பப்படும் மக்கள் தமது பிரச்சினைகளைத் தெளிவாக விளங்கிக் கொண்டு அவற்றில் இருந்து விடுபடுவதற்குரிய உணர்வுபூர்வமான பிரக்ஞையை அவர்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதே தெணியானின் எழுத்தின் குறிக்கோளாக இருந்தது. அவரின் இரண்டாவது நினைவு தினம் இன்றாகும்.
தமிழ் எழுத்துத்துறையில் கால்பதித்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் போராளியாக விளங்கியவர் அவர். தெணியானின் எழுத்துக்களை மிகநீண்ட காலமாக உன்னிப்பாக அவதானித்தால் ஈழத்தின் தலைசிறந்த இலக்கிய சிருஷ்டியாகவே அவரைக் கருத முடியும்.
சமூகக் கொடுமைகளைக் கண்டு கொதித்து, அவற்றைத் தமது படைப்புகளாகத் தந்த எழுத்தாளர் தெணியான், குறிப்பாக சாதி அமைப்பின் அவலங்கள் குறித்து மிக அதிகமான எண்ணிக்கையிலான சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும் சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது. பொலிகண்டி கிராமத்தின் ‘தெணி’ என்னும் பகுதியில் வாழ்ந்தவர் அவர்.
சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்புலக அறுவடைகளாகும்.
தெணியானின் படைப்புக்கள் வெறும் கற்பனை மனிதர்களைப் பாத்திரங்களாக உருவாக்கி நடமாட விடுவதில்லை. அவருடைய படைப்புக்கள் யதார்த்தமானவை. நிதர்சனமான காலக்கண்ணாடிகளே அவரின் படைப்புக்கள்.
எந்தக் காலத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும், தாயக மண்ணை, தமிழ் மக்களை விட்டுத் தூரவிலகி ஓடிப்போகாத ஒருவரே தெணியான்.
வாழ்நாள் இலக்கியப் பணிக்கென இலங்கை அரசு ’சாகித்திய ரத்னா’ (2013), இலங்கை இந்து கலாசார அமைச்சு ‘கலாபூஷணம்’ (2003), வடக்கு மாகாணக் கலாசாரத்துறை இலக்கியத்திற்கான ஆளுனர் விருது (2008) என்பவற்றை வழங்கி தெணியானைக் கௌரவித்துள்ளன.
ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியம். இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாக இலக்கியத்தைக் கருதும் தெணியான், ஒடுக்கப்பட்டோர் அழகியலைத் தமது ஆக்கத் திறன் மூலம் தொடர்ந்தும் அழகுபடுத்தி வந்தவர். இவற்றின் பெறுபேறாக, ஈழத் தமிழிலக்கியப் பரப்பில் விசேட கவனிப்புக்குரிய ஆற்றல் மிகு படைப்பாளியாக இன்றுவரை கணிக்கப்படுபவராவார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மிகுந்த அக்கறையுடன் அவதானித்து இலக்கியங்களை படைத்தவர் தெணியான்.
தெணியானின் நாவல்களான ‘கழுகுகள்’ நாவல் ’தகவம்’ பரிசையும், ‘மரக்கொக்கு’ இலங்கை அரசினதும் வடகிழக்குமாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும், தேசிய இலக்கியப் பேரவைப் பரிசையும், ’காத்திருப்பு’ வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ’கானலின் மான்’ இலங்கை அரசின் சாகித்திய விருதையும், தேசிய கலை இலக்கியப் பேரவைப் பரிசையும், ’குடிமைகள்’ இலங்கை அரசின் சாகித்திய விருதையும் கொடகே விருதையும் ‘சிதைவுகள்’ குறுநாவல் தேசிய கலை இலக்கியப் பேரவைப் பரிசையும், சுபமங்களா பரிசையும், ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத் தொகுதி கொடகே விருதையும் பெற்ற படைப்புகளாகும்.
தெணியான், சிறுபராயத்திலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் நாட்டம் கொண்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்தர்களுள் ஒருவராக விளங்கியவர். சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து ஆலயப் பிரவேசம், தேனீர்க்கடைப் பிரவேசம் போன்ற பன்முகப்பட்ட சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொண்ட ஒரு சமூக விடுதலைப் போராளி. ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியமாக விளங்கியது.
தெணியானின் ஆக்கங்களாக வெளிவந்த படைப்புக்கள் அனைத்தும் ஆய்வாளர்களின் சிந்தனைகளைக் கிளறிவிட்டுள்ளன எனக் கூறலாம். படைப்பியல் இலக்கியம் வெறும் பொழுதுபோக்கிற்கான சாதனமன்று. ஆழ்ந்த சமூக நோக்குடன் எழுத்தாளன் சொல்லுவது தனது தனிப்பட்ட, சமூக ரீதியான வாழ்க்கையின் நடைமுறைச் செயற்பாட்டினது சத்தியமான வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியானவர் தெணியான்.
மறைந்த தெணியான் ஆரம்பக் காலம் முதலே இடதுசாரி முற்போக்கு சிந்தனைகளோடும் அவை சார்ந்த போராட்டங்களோடும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு அவர் தனது எழுத்தையும் சமூக மாற்றத்தையும், சீரமைப்பிற்காகக் கூரிய ஆயுதமாகவே பயன்படுத்தியுள்ளார்.