யாழ்ப்பாணம், பன்னாலை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்தி நிலையமொன்றினுள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி உணவு உற்பத்தி நிலையத்தில் சோதனைக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இருவர் சென்றதுடன், உரிய அனுமதி பெறாது இந்த நிலையம் இயங்கி வந்தமை மற்றும் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த உணவு உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த இருவர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் தர்க்கப்பட்டதுடன், அவர்களை உணவு உற்பத்தி நிலையத்தினுள் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இது தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அப்பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவித்ததை அடுத்து, தெல்லிப்பழை பொலிஸாருக்கு அச்சுகாதார வைத்திய அதிகாரி தகவல் வழங்கினார்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று, பூட்டி வைக்கப்பட்ட அப்பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடமிருந்து முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸார், ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். விசேட நிருபர்