இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை இம்மாதம் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தூர், கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இவ்விபத்து இடம்பெற்றது. வீதியை கடக்க சைக்கிளுடன் வீதியோரமாக காத்திருந்த பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வாதரவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்பவரே தனது பிறந்த தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார், இராணுவத்தினருக்கு சொந்தமான ஹைஏஸ் வாகனச் சாரதியான மேற்படி இராணுவ வீரரை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போதே மேற்படி இராணுவ வீரருக்கு விளக்கமறியல் உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவ்வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து பலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். விசேட நிருபர்