Tuesday, July 23, 2024
Home » ரபாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உறுதி: 810,000 பேர் வெளியேற்றம்

ரபாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உறுதி: 810,000 பேர் வெளியேற்றம்

மற்றொரு மருத்துவமனையில் முற்றுகை

by Gayan Abeykoon
May 21, 2024 8:54 am 0 comment

காசாவின் வடக்கில் ஜபலியா மற்றும் தெற்கில் ரபா நகரங்களில் இஸ்ரேலிய படை மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே உக்கிர மோதல் நீடித்து வருவதோடு காசாவெங்கும் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு காசாவில் உள்ள பைத் லஹியா மற்றும் காசா நகரின் ஷெய்க் அல் ரத்வானில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கில் ரபாவுக்கு அருகில் உள்ள தால் அல் சுல்தான் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மறுபுறம் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருவதோடு பலஸ்தீன போராளிகளும் அங்கு கடும் சண்டையிட்டு வருகின்றனர்.

ஜபலியாவில் இஸ்ரேலிய துருப்புகளுடன் சண்டையிட்டு வருவதாக காசாவை தளமாகக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ஆயுதப் பிரிவான அல் குத்ஸ் தெரிவித்துள்ளது. இமாத் அகில் பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற மோதலில் படையினர் கொல்லப்பட்டும் பலர் காயத்திற்கும் உள்ளானதாக அந்தக் குழு டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களின் நிலை குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. அந்த மருத்துவமனையின் விநியோகங்களும் தீர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவுக்கான உதவிகள் வரும் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றிய இஸ்ரேலியப் படை அதனை மூடியிருக்கும் நிலையில் மற்றொரு எல்லைக் கடவையான கெரம் ஷலோமும் மூடப்பட்டிருப்பதால் காசாவுக்கான உதவிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெற்கு காசாவில் படை நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், அங்கு சென்றுள்ள வெள்ளை மாளியை பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுல்லிவானிடம் தெரிவித்துள்ளார்.

‘ஹமாஸை அகற்றுவதை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணயக்கைதிகளை மீட்பதற்கு ரபாவில் தரைவழி நடவடிக்கையை நாம் விரிவுபடுத்தவுள்ளோம்’ என்று கல்லன்ட் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபாவில் வெளியேற்ற நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருந்த எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் அங்கிருந்து மக்கள் மீண்டும் ஒருமுறை வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் ரபாவில் இருந்து 810,000க்கும் அதிகமானவர்கள் வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘ஒவ்வொரு முறையும் மக்கள் வெளியேறும்போதும் அவர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கின்றனர். பாதுகாப்புக்காக மக்கள் அனைத்தையும் விட்டு விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பான பிரதேசம் எதுவும் இல்லை’ என்று அந்த ஐ.நா. நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் தெற்கு நகரான கான் யூனிஸில் தமது வீட்டை விட்டு குடும்பத்தினருடன் ரபாவை நோக்கி வெளியேறிய மாஜித் ஒமர் என்பவர் மீண்டும் தமது வீட்டுக்கே திரும்பிய நிலையில் ‘காசாவின் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை’ என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘எமது குழந்தைகள், பேரக் குழந்தைகள் மற்றும் மகள்மாரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்து எமது வீட்டின் இடிபாடுகளுக்கு மேல் வசிக்கிறோம். ஏனென்றால் அடைக்கலம் பெறுவதற்கு இங்கு எந்த இடமில்லை’ என்று ஒமர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT