Home » இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இணைப்புப்‌ பாலமாக தூய ஆவியானவர்

இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இணைப்புப்‌ பாலமாக தூய ஆவியானவர்

by Gayan Abeykoon
May 21, 2024 9:00 am 0 comment

நமது அன்றாட வாழ்வில்‌ பல இன்ப துன்பங்களைச்‌ சந்திக்கிறோம்‌. மனித வாழ்வு வளர்ச்சியை நோக்கிப்‌ பயணம்‌ செய்யும்போது அவ்வப்போது தடுமாற்றம்‌, மேடு பள்ளங்களைச்‌ சந்திக்கின்றது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ நம்மை வழிநடத்த ஒரு துணை தேவைப்படுகிறது. அந்த துணையாளர்தான்‌ தூய ஆவியானவர்‌. படைப்பின்‌ தொடக்கமே தூய ஆவியின்‌ செயல்பாடுதான்‌. தூய ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக்‌ கொண்டிருந்தார்‌ (தொ.நூ. 1:2). அவரால்‌ படைப்பாற்றல்‌ உருவானது.

மனிதன்‌ தனிமையாய்‌ இருப்பது நல்லதல்ல என்பதை அறிந்த கடவுள்‌ அவனுக்கு சரி நிகராக ஒரு துணையை உருவாக்கினார்‌. துணை இருக்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. விரக்தி, வேதனைகளைப்‌ பகிர்ந்து கொள்ள முடிகிறது. உள்ளத்திற்கு உறுதி கிடைக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில்‌ தூய ஆவியின்‌ ஆற்றலையும்‌, செயலாக்கத்தையும்‌ நாம்‌ புரிந்துகொள்கிறோம்‌.

தடுமாறும்‌ மனிதனை, பாதை மாறிச்‌ செல்லும்‌ மனிதனை இயேசுவிடம்‌ அழைத்துச்‌ செல்லும்‌ மகத்தான பணியைச்‌ சிறப்பாகச்‌ செய்பவர்‌ தூய ஆவியானவர்‌. தூய ஆவியானவர்‌ கடவுளுக்கும்‌ மனிதனுக்கும்‌ இடையே ஓர்‌ இணைப்புப்‌ பாலம்‌, ஒருங்கிணைப்பாளராக செயற்படுகிறார்.

தந்தையின்‌ விருப்பங்களை இம்மண்ணுலகில்‌ நிறைவு செய்வதற்கு, அனைத்துத்‌ துன்பங்களையும்‌ தாங்கிக்கொள்ள பக்குவப்பட்ட மனநிலையை தூய ஆவியின்‌ வழியாகவே இறைமகன்‌ இயேசு பெற்றுக்கொண்டார்‌.

விண்ணகம்‌ சென்ற இயேசு, தூய ஆவியானவரை அனுப்பினார்‌. ஆவியானவர்‌ மிகுந்த வல்லமையோடு இறங்கி வந்தார்‌. பயந்து நடுங்கிய திருத்தூதர்கள்‌ துணிவோடு போதிக்கவும்‌ பல மொழிகளில்‌ பேசவும்‌ தொடங்கினர்‌. வலுவற்ற நிலையில்‌ இருந்த அவர்களுக்கு தூய ஆவியானவர்‌ துணை நின்றார்‌ (உரோ. 8:26).

தூய ஆவியின்‌ கொடைகளைப்‌ பெற்றவர்கள்‌ சோதனைகளைக்‌ கடந்து, சாதனைகள்‌ படைப்பார்கள்‌. இயேசுவின்‌ திருமுழுக்கு, பாலைவனச்‌ சோதனை, கலிலேயாவில்‌ பொதுப்பணி தொடக்கம்‌ ஆகியவை இதை தெளிவாக்குகிறது (லூக்‌. 3:21-45).

குழப்பம்‌ வரும்போதெல்லாம்‌ இயேசுவைத்‌ தந்தையிடம்‌ அழைத்துச்‌ சென்றவர்‌ தூய ஆவியானவர்‌. பணி வாழ்வின்‌ வழியாக, தான்‌ பெற்ற அனுபவத்தைத்‌ தனது சீடர்களுக்கும்‌ பகிர்ந்து கொடுத்தார்‌. உயிர்த்த இயேசு இரண்டு முறை உங்களுக்குச்‌ சமாதானம்‌ என்று . கூறி, தூய ஆவியானவரை அனுப்பினார்‌ (யோவா. 20:19-21).

இந்த சமாதானத்தை நமக்கு அளிப்பவர்‌ தூய ஆவியானவரே. நானும்‌ தந்தையைக்‌ கேட்பேன்‌. அவர்‌ மற்றொரு துணையாளரை உங்களுக்குத்‌ தருவார்‌. அவர்‌ உங்களோடு என்றும்‌ இருப்பார்‌, அவர்‌ உண்மையின்‌ ஆவியானவர்‌ (யோவா. 14:16-17) என்றார்.

கிறிஸ்து வாக்களித்த தூய ஆவியை நாம்‌ திருவருட்சாதனங்கள்‌ வழியாகப்‌ பெற்றுக்கொள்கிறோம்‌.

ஆதிக்‌ கிறிஸ்தவர்களிடம்‌ ஒரே மனம்‌, ஒருமித்த உள்ளத்துடன் கூடி செபித்தல்‌, தேவைக்கு ஏற்ப பகிர்தல்‌ இவைகள்‌ அனைத்தையும்‌ செயலாக்கம்‌ பெறச்‌ செய்தது தூய ஆவியின்‌ ஆற்றலே. அவர்களின்‌ அகத்திலிருந்து தூய ஆவியின்‌ ஆற்றல்‌ வெளிப்பட்டதால்தான்‌ பல இடங்களுக்குச்‌ சென்று போதித்தனர்‌. பொதுவுடைமை நோக்கில்‌ உறவுகளில்‌ மேம்பாடு கண்டனர்‌. குடும்ப உறவுகளில்‌ தடுமாறும்‌ மனிதனை, நல்‌ வழிப்படுத்துவது தூய ஆவியே. அந்த ஆவியால்‌ செயலாக்கம்‌ பெறும்போது அங்கே அமைதி பிறக்கிறது. உறவுகள்‌ அனைவரையும்‌ ஒருமுகப்படுத்துகிறது. கடவுளின்‌ ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக் கொண்டிருந்தார்‌. உலக தொடக்கமே ஆவியின்‌ செயல்பாடாக அமைந்தது (தொ.நூ. 1:2).

ஒரு தாய்‌ கருவுறும்போது தாயின்‌ சுவாசத்திலேயே குழந்தை உயிர்‌ வாழ்கிறது. அந்த சுவாசம்‌, ஆதியிலே ஆவியானவர்‌ மனிதன்‌ மேல்‌ ஊதிய சுவாசமே. இன்றைக்கும்‌ அது தலைமுறை தலைமுறையாக, பிள்ளைகளின்‌ பிள்ளைகளாகத்‌ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. வயிற்றுக்குள்‌ தாயினுடைய சுவாசத்தினால்‌ உயிர்‌ வாழ்கின்ற குழந்தை, உலகத்தில்‌ பிறக்கும்போது தானாகவே சுவாசிக்க ஆரம்பித்துவிடுகிறது. இது எத்தனை ஆச்சரியமான செயல்‌.

இந்தக்‌ காட்சியை சற்றே கற்பனை செய்து பார்த்தால் நமக்கு ஆவிக்குரிய நுரையீரல்‌ இருக்கிறது என்றால் கிறிஸ்து நம்மீது ஊதி தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்று சொல்லும்போது அந்த ஆவிக்குரிய சுவாசப்‌ பைகள்‌ இயங்கத்‌ தொடங்குகின்றன. அப்போது நாம்‌ அனைவரும்‌ இறைவனுக்குச்‌ சொந்தமானவர்களாக முத்திரையிடப்படுகிறோம்‌.

“நாம்‌ கூடி செபிக்கும்போது அங்கே இறைவன்‌ இருக்கிறார்‌. தூய ஆவியால்‌ நிரப்பப்படுகிறோம்‌. எனக்கு உறுதியூட்டும்‌ இறைவனின்‌ துணையால்‌ எதையும்‌ செய்ய எனக்கு ஆற்றல்‌ உண்டு (பிலி, 4:13)

உலகத்‌ தொடக்கத்தில்‌ மனித இதயத்தில்‌ குடிபுகுந்த ஆவியானவர்‌ இன்றும்‌ நம்மை வழிநடத்தி வருகிறார்‌. துன்பத்தில்‌ தோள்‌ கொடுக்கிறார்‌. நமது போராட்ட வாழ்வுக்கு மத்தியில்‌ சமாதானத்தின்‌ தூதுவராக நமக்குள்‌ இருந்து செயல்படுகிறார்‌. நமக்கு ஆற்றல்‌ தந்து ஆன்மீக வாழ்வில்‌ வளமை காண தூய ஆவியின்‌ துணை வேண்டுவோம்.

அருட்பணி முனைவர் ம.அருள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT