Thursday, July 25, 2024
Home » உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் ஜனாதிபதியின் விபத்து மரணம்!

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் ஜனாதிபதியின் விபத்து மரணம்!

by Gayan Abeykoon
May 21, 2024 10:00 am 0 comment

ரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹின் உள்ளிட்ட பிரதிநிதிகள் பயணித்த ஹெலிகொப்டர் நேற்றுமுன்தினம் பிற்பகல் விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் ஜனாதிபதியின் இழப்பு ஈரானிலும் உலககெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரானும் அதன் அயல்நாடான அசர்பைஜானும் இணைந்து அசர்பைஜானில் ஜிஸ் கலஸி மற்றும் குதாபரின் நீர் மின்னுற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கு நீர் வழங்கும் திட்டமொன்றை அமைத்துள்ளன. இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் அசர்பைஜான் ஜனாதிபதி அலியோவில் அழைப்பில் ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைசி தலைமையிலான உயர்பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் பங்குபற்றினர். ஈரான் ஜனாதிபதியும் அசர்பைஜான் ஜனாதிபதியும் இணைந்து இத்திட்டத்தை வைபவ ரீதியாக தொடக்கி வைத்தனர்.

ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் மூன்று ஹெலிகொப்டர்களில் பயணித்திருந்தனர். அவர்கள் வைபவம் நிறைவுற்று திரும்பிக் கொண்டிருந்த போது, ஈரானின் உள்ளூர் நேரம் பி.ப 3.00 மணியளவில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் தொடர்பை இழந்தது. அது ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்திலுள்ள மலைப்பாங்கான டிஸ்மர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பாதுகாப்பாக ஈரானின் தப்ரீஸை வந்தடைந்தன.

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் தொடர்பை இழந்தமை ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, உலகெங்கிலும் பெரும் பேசுபொருளாகியது. உலகின் கவனமே ஈரானின் பக்கம் குவிந்தது.

இந்த ஹெலிகொப்டர் தொடர்பை இழந்த பகுதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். அச்சமயம் அப்பகுதியில் கடும் பனிமூட்டமும், கடும் மழைப்பொழிவாகவும் காணப்பட்டது. அது மிகவும் பின்தங்கிய மலைப்பாங்கான வனப்பிரதேசமும் ஆகும்.

அப்பிரதேசத்தை நோக்கி, ஈரானின் அவரச மீட்புப் படையினரும், ஈரான் இஸ்லாமிய குடியரசு காவல் படையினர் உள்ளிட்ட விஷேட படையினரும் விரைந்தனர். 70 இற்கும் மேற்பட்ட மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடிப்பதிலும் அந்த இடத்தைத் துரிதமாக அடைவதிலும் மீட்புக் குழுக்களுக்கு சீரற்ற காலநிலை பெரும் சவாலாக அமைந்திருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.

அ​தேநேரம் ஈரான் ஜனாதிபதியினதும் ஏனையவர்களதும் பாதுகாப்புக்காக ஈரானிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் விஷேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இதேவேளை ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமெய்னி, “மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்காதவர்கள்” என்று குறிப்பிட்டதோடு, அவர்களது பாதுகாப்புக்காக பிரார்த்தனையும் செய்தார்.

இந்நிலையில் ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டரை தேடும் பணிகளை முன்னெடுக்கவென துருக்கி, சவுதி அரேபியா, கட்டார், துபாய், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள் அவசர மீட்புக் குழுவினரை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தன.

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் தொடர்பை இழந்த பகுதியில் கடும் பனிமூட்டத்துடன் சீரற்ற காலநிலை நிலவுவதால் துருக்கியிடம் இரவில் தேடுதல் நடத்தக்கூடிய ஹெலிகொப்டர் மற்றும் ஆளில்லா ட்ரோன் உதவியை வழங்குமாறு ஈரான் கேட்டுக் கொண்டதோடு, துருக்கி அந்த உதவியை வழங்கியது.

நேற்றுமுன்தினம் பின்னேரமும் முதல் கடும் முயற்சியுடன் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நேற்று அதிகாலைதான் குறித்த ஹெலிகொப்டர் மலையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த ஹெலியில் பயணித்த அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஈரான் அசர்பைஜான் எல்லையிலுள்ள டிஸ்மர் பாதுகாப்பட்ட பகுதியில் ஜுல்பா நகருக்கு அருகில் மலைப் பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் ஈரான் ஜனாதிபதி இப்றாஹீம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் அமீர் அப்துல்லாஹியான், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி, ஆன்மீகத் தலைவர் அலி காமெனெய் இன் கிழக்கு அசர் பைஜானுக்கான பிரதிநிதி முஹம்மத் அலி அலே ஹாசெம், தப்ரீஸ் இமாம் உட்பட ஹெலிகொப்டரின் பிரதான விமானிகளான கேர்ணல் தாஹிர் முஸ்தபாவி, கேர்ணல் மோசென் டியானொஷ் அடங்கலாக 09 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தையிட்டு ஈரான் முழுவதும் சோகமயமாகியுள்ளது.

ஈரானின் மஸ்ஹட் மாவட்டத்தின் நொகானில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி சமயப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்த ரைசி, சமயப்பற்றுமிக்க கொம்மில் கல்வி பெற்றார். ஈரானின் சட்டத்துறையில் பல உயர்பதவிகளையும் வகித்த இவர், 2004 முதல் 2014 வரையும் பிரதி நீதியரசராகவும் 2014 முதல் 2016 வரை சட்ட மா அதிபராகவும், 2019 முதல் 2021 வரையும் பிரதம நீதியரசராகவும் பதவி வகித்துள்ளார்.

2017 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத போதிலும், 2021 இல் போட்டியிட்டு 62.9 சதவீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியானார். அவர் விபத்தில் உயிரிழக்கும் போது 63 வயதாகும்.

இவரது மறைவையொட்டி ரஷ்யா, உண்மையான இரண்டு நண்பர்களை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்தோடு உலக பல நாடுகளும் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளன. லெபனான் மூன்று நாட்களுக்கு துக்க தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.

மர்லின் மரிக்கார்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT