Friday, June 14, 2024
Home » சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் ஆல் ஸஊத்தின் பொறுப்பின் கீழ் புனித மக்கா, மதீனா இருப்பது பெருமைக்குரியது

சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் ஆல் ஸஊத்தின் பொறுப்பின் கீழ் புனித மக்கா, மதீனா இருப்பது பெருமைக்குரியது

இலங்கையின் முதல் ஹஜ் குழு இன்று சவுதி பயணம் ; கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழியனுப்பும் வைபவம்

by Gayan Abeykoon
May 21, 2024 10:53 am 0 comment

வுதி அரேபியாவிலுள்ள புனித மக்கா, மதீனா என்பது உலக முஸ்லிம்களினால் மதிக்கப்படுகின்ற உலக முஸ்லிம்களின் பிரதான வணக்க வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்ட இரு முக்கிய புனித ஸ்தலங்களாகும். குறிப்பாக முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவது புனித மக்கா, மதீனாவோடு சம்பந்தப்பட்ட விடயமாகும். இக்கடமையை தன் உடலாலும் பொருளாளும் சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டும்.

சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வை வணங்கி வழிபடவென உலகிலேயே நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மஸ்ஜித் தான் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வாகும். இங்கு நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு இலட்சம் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்று இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இரு ஹரம் ஷரீப்களின் விஸ்தரிப்புகள் என்பது உமர் (ரழி) அவர்கள் ஆட்சிக் காலம் தொடக்கம் தற்போதைய சவுதி அரசின் ஆட்சி வரை பல கட்டங்களாக இடம்பெற்றது. இருந்தாலும் சவுதி அரசின் ஆட்சியாளர்கள் சவுதி அரேபியாவை ஆட்சி செய்யத் தொடங்கிய முதலாவது மன்னர் காலத்தில் இருந்து தற்போதைய ஆட்சியாளர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வரை இரு ஹரம் ஷரீப்களின் விஸ்தரிப்பு என்பதும், யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் செய்து கொடுப்பதும் உலகின் அனைவராலும் பாராட்டி மெச்சப்படுகின்ற விடயமாக உள்ளது. சவுதி அரேபியாவை ஆட்சி செய்யும் ஆல் ஸஊத் பரம்பரையினரின் ஆட்சிக் காலத்தில் தான் கஃபதுல்லாஹ்வின் விஸ்தரிப்பு அபிவிருத்தி பாரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

புனித மக்கா, மதீனா மஸ்ஜித்களுக்கு சவுதி அரேபிய ஆட்சியாளர்கள் ஆற்றிவரும் அளவிலா சேவைகளின் நிமித்தம் ‘இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் – ஹாதிமுல் ஹரமைன் அஸ் ஷரீபைன்’ என்ற பெயரைப் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இப்பெயரைப் பெற்றுள்ளார். இவர் இப்பள்ளிவாசல்களின் மேம்பாட்டுக்கும் இப்பள்ளிவாசல்களில் தங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்றவரும் உலக முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருகிறார்.

அந்த வகையில் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பிரதான இடமாக புனித மக்கா விளங்குகிறது. இஸ்லாத்தின் பிரதான கடமைகளில் ஒன்றாக விளங்கும் ஹஜ்ஜை நிறைவேற்றும் தளங்களாக விளங்கும் புனித மக்கா, மதீனா சவுதி அரேபியாவில் அமைந்திருப்பது மாபெரும் வரப்பிரசாதமாகும்.

புனித மக்கா, மதீனா வரும் அனைத்து யாத்திரிகர்களின் நலன் கருதி சவுதி அரசாங்கம் சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வசதி அளித்து வருகிறது. குறிப்பாக விமானப் போக்குவரத்து வசதிகள், மக்கா, மதீனாவில் அதிநவீன சொகுசு ஹோட்டல்கள், அதி நவீன போக்குவரத்து பஸ்கள், மக்கா, மதீனா அதிநவீன சொகுசு ரயில் போக்குவரத்து வசதிகள், ஹஜ் கடமையோடு சம்பந்தப்பட்ட மினா, முஸ்தலிபா, அரபா போன்ற இடங்களிலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடாரங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என அனைத்தையும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.

அதன் பயனாக புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருடா வருடம் மூன்று மில்லியன் யாத்திரிகர்கள் மக்காவில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுகின்றனர். மூன்று மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதும் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதும்  இலகுவான காரியமல்ல.

இருந்த போதிலும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் சவுதி அரசு சகல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருவதால் தான் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி வணக்க வழிபாடுகளை இலகுவில் நிறைவேற்றக்கூடியதாக உள்ளது. உலகிலேயே 24 மணி நேரமும் யாத்திரிகர்களின் வணக்க வழிபாடுகளுக்காக கதவுகள் மூடப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருக்கும் புனித தளங்கள் தான் கஃபதுல்லாஹ்வும் மஸ்ஜிதுன் நபவியும் ஆகும்.

ஹஜ் கடமையை நிறைவேற்றவரும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் சகல வசதிகளையும் முன்கூட்டியே செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு உம்ரா யாத்திரிகர்களைக் கூட சவுதி மட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கஃபாவிலும் மஸ்ஜிதுன் நபவியிலும் ஹஜ் யாத்திரிகர்களின் நலன் கருதி பல்லாயிரக்கணக்கான சுத்திகரிப்பு வேலையாட்களும் பல சுத்திகரிப்பு இலக்ட்ரோனிக் வாகனங்களும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 15,000 க்கும் மேற்பட்ட மலசல கூடங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதோடு தினமும் உயர் ரக கிருமிநாசினிகள் மூலம் 5 தடவைகள் அவை சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட ஸம்ஸம் நீர்த் தாங்கிகள் பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளதோடு அந்நீர்த் தாங்கிகள் தினமும் பல முறை நிபுணர்களால் பரீட்சிக்கப்பட்டு வருகிறது.

மேலும் யாத்திரிகர்களின் நலன் கருதி அவர்களது பெருமதியான பொருட்களைப் பாதுகாத்து வைக்க பல்லாயிரக்கணக்கான உயர் ரக பாதுகாப்புப் பெட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மக்கா, மதீனாவின் திறந்த வெளியரங்குகளில் மார்பல்கள் வெப்பத்தைத்தணித்து குளிரைக் கொடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதும் விஷேட அம்சமாகும். அத்தோடு 65 மொழிகளில் ஹஜ் கிரியைகள் மற்றும் இதர மார்க்க விடயங்கள், குர்ஆன் விளக்கங்கள், ஜும்ஆப் பிரசங்கங்கள் நிகழ்த்தப்படுகிறது. யாத்திரிகர்களில் நோயாளிகள் வயோதிபர்கள் ஆகியோரின் நலன் கருதி பல்லாயிரக்கணக்கான சிறு கதிரைகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதோடு அவர்களை ஏற்றிச் செல்லவென 500 க்கும் மேற்பட்ட இலத்திரனியல் வாகனங்களும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் உயர் ரக சுகாதார கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்கா, மதீனா மற்றும் புனித இடங்களுக்குச் செல்லும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் சவுதி அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சவுதி மன்னருடைய தனிப்பட்ட செலவில் ஏழைகள், அகதிகள், உலமாக்கள், புத்திஜீவிகள் என சுமார் ஐயாயிரம் பேர்  வருடா வருடம் உலகெங்கில் இருந்தும் இலவசமாக ஹஜ்ஜுக்காக புனித மக்காவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவும் சவுதி அரசு செய்கின்ற சேவைகளில் மிக முக்கியமான சேவையாகும்.

அதனால் ஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு அளப்பரிய சேவைகள் வழங்கவென சவுதி அரேபியா பாரிய கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் நிமித்தம் இஸ்லாமிய கலாசார அமைச்சும் ஹஜ் விவகார அமைச்சும் அவற்றுக்கு மிகத் தகுதியான அமைச்சர்களும் மாத்திரமல்லாமல் தலைமைத்துவ சபையொன்றையும் கொண்டு இந்த அளப்பரிய சேவைகளை சவுதி முன்னெடுத்து வருகிறது.

ஹஜ், உம்ரா யாத்திரிகர்களின் நலன் கருதி சவுதி ஒவ்வொரு வருடமும் புதிய புதிய கண்டுபிடிப்புகளையும், இலகு வழிமுறைகளையும் பயன்படுத்தி யாத்திரிகளுக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் சவுதி அரேபிய ஆட்சியாளர்களின் கைகளில் புனித மக்கா, மதீனா இருப்பது உலக முஸ்லிம்களுக்கே பெருமையாகும்.

அந்த வகையில் இவ்வருட ஹஜ் காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறையும் கடந்த வருடத்தைப் போன்று முப்பது இலட்சம் ஹஜ் யாத்திரிகர்கள் மக்காவில் ஒன்றுகூடுவர் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இருந்தும் இவ்வருடமும் 3500 பேர் ஹஜ் கடமைக்காக செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குரிய சகல ஏற்பாடுகளையும் இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியும் கொழும்பிலுள்ள சவுதி தூதரகமும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் இவ்வருடத்திற்கான இலங்கையின் முதலாவது ஹஜ் யாரத்திரிகர்கள் குழு இன்று (21.05.2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனித மக்கா நோக்கிப் பயணிக்கிறது. இவர்களை வழியனுப்பி வைக்கும் விஷேட வைபவம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை அரசாங்கத்தின் உயர் பிரதிநிதிகள் மற்றும் சவுதிக்கான இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி உள்ளிட்ட பிரதிநிதிகளின் பங்குபற்றுதலோடு அதிகாலையில் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஹஜ் யாத்திரிகர்கள் முழுமையான பாதுகாப்பான சூழலிலும் மன அமைதியுடனும் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் தங்களது கடமைகளை இனிதே நிறைவேற்றிட சவுதி அரசு இரவு பகலாக தன்னலம் பாராது,

அல்லாஹ்வின் விருந்தாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புகளுடன் சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆகவே எல்லாம் வல்ல அல்லாஹ் சவுதி அரசைப் பொருந்திக் கொள்வதோடு அந்நாட்டு ஆட்சியாளர்களையும் பொருந்தி அவர்கள் தொடர்ந்தும் சேவை செய்ய நல்லாரோக்கியத்தை வழங்கிடப் பிரார்த்திப்போம்.

அஷ்ஷைக் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (BA)

பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்

கொழும்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT