Thursday, December 12, 2024
Home » 3 கூட்டங்கள் ஊடாக காலி மாவட்டத்தின் கருத்துக்களை பெற நடவடிக்கை

3 கூட்டங்கள் ஊடாக காலி மாவட்டத்தின் கருத்துக்களை பெற நடவடிக்கை

by Prashahini
May 21, 2024 3:54 pm 0 comment

இனப்பிரச்சினை மற்றும் போருக்குப் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துப்பரிமாறவும் அது தொடர்பில் கவனம் செலுத்தும் முயற்சியாகவும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) காலி மாவட்டச் செயலகத்தில் அண்மையில் 3 கூட்டங்கள் மூலம் பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்களைப் பெற்றது.

அரச அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அமைப்புக்கள் வரை பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கீழ்மட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நபர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.

நல்லிணக்கச் செயற்பாட்டில் உள்நாட்டு செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை காலி மாவட்ட பதில் செயலாளர் சி.பி.ராஜகருணா மற்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தினர்.

ஆணைக்குழுவின் முன்னேற்றம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வை உறுதி செய்தல் குறித்தும் பிராந்திய செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பிரதேச செயலாளர்கள், மாகாண சபை திணைக்களத் தலைவர்கள் ஒருங்கிணைந்த மாகாண பொறிமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் கலந்து கொண்டோருக்கு அது தொடர்பில் புரிந்துணர்வை வழங்கினர்.

முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சமூக பிரதிநிதிகளினால் சமூகக் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு இன்றியமையாத அடிமட்டச் செயற்பாடுகளை பிரதானமாக முன்வைத்தனர்.

பாலினம் முதல் சமூக நலன் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் வரையிலான முக்கிய பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டன. ஆணையாளர்கள் தெரிவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குவது, விதவைகளுக்கு கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்தில் 50% உரிமையுடன் மறுமணம் செய்யவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

இது தவிர, போதிய ஆதரவு கிடைக்காமையினால் பாதிக்கப்படக்கூடிய அங்கவீனமடைந்த படைவீரர்கள் முகங்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தி, குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை வளர்ப்பதற்கு ஆணைக்குழுவிற்கு இருக்கும் திறன் குறித்த ஆலோசனைகள் பெறும் செயற்பாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவம்ச, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவின் தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, நிறைவேற்று அதிகாரி (மக்கள் தொடர்பு) தனுஷி டி சில்வா , இணைப்பாளர் சரத் கொத்தலாவல, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி (சட்டம்) வை.எல். லொகுனாரங்கொட மற்றும் இடைக்காலச் செயலகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் கொள்கைத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT