Thursday, June 20, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
May 20, 2024 9:49 am 0 comment

அப்பொழுது, பரமசிவனுடைய திருவருளினாலே, ஒருபூதம் விரைந்து வந்து, பீடத்தின் மேலே ஆயிரம்பொன் பொருந்திய கிழியொன்று வைத்து, முன்னே நின்று, “இந்தக்கிழி பொன்னுலவாக்கிழி இது பரமசிவனால் உமக்கு அருளிச் செய்யப்பட்டது” என்று சொல்ல; பிள்ளையார் திருவருளை நினைந்து, நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, பீடத்தின் மேலே வைக்கப்பட்ட பொற்கிழியைச் சிரமேற்கொண்டு, தந்தையார் கையிற் கொடுத்து, “பரமசிவனையே தலைவராக நினைந்து வேதவிதிப்படி செய்யப்படும் யாகத்தை நீருஞ் சீர்காழியில் இருக்கின்ற மற்றப்பிராமணர்கள் சமஸ்தரும் செய்ய, இக்கிழி குறையாது முகும்” என்று சொல்லி, சீர்காழிக்குப் போம்படி அவருக்கு விடைகொடுத்து அனுப்பி, தாந்திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்தார்.

சிலநாட்சென்ற பின் அவ்விடத்தை அகன்று, திருக்கோழம்பம், திருவைகன் மாடக்கோயில், திருநல்லம், திருவழுந்தூர், திருத்துருத்தி, மாயூரம், திருச்செம்பொன் பள்ளி, திருவிளநகர், திருப்பறியலூர், திருவேட்டக்குடி என்னுந் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தருமபுரத்தை அடைந்தார். அந்தத் தருமபுரம் திருநீலகண்டப் பெரும்பாணருடைய தாயார் பிறந்த தலமாதலால், அங்குள்ள அவருடைய சுற்றத்தார்கள் வந்து எதிர்கொண்டு வணங்கித் துதித்தார்கள். அது கண்டு, திருநீலகண்டப் பெரும்பாணர் பிள்ளையார் அருளிச்செய்த அருமையாகிய திருப்பதிகங்களின் இசையைத் தாம் யாழில் இட்டு வாசிக்கப்பெற்ற பெரும்பேற்றை அவர்களுக்கு அருளிச்செய்தார். அவர்கள் அதைக் கேட்டு “நீர் திருப்பதிகவிசையை அளவு பெற யாழிலே அமைத்து வாசித்தலினாலே உலகமுழுதிலும் இசை விளங்குக” என்றார்கள். உடனே பெரும்பாணர் மன நடுங்கி, பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கி நின்று, “சுவாமி! திருப்பதிகவிசை அளவுபடாத தன்மையை இவர்களேயன்றி உலகத்திலுள்ள மற்றையாவரும் அறிந்து உண்மையை உணர்ந்து உய்யும்பொருட்டுத் தேவரீர் ஒரு திருப்பதிகம் பாடியருளுவீராகில், அடியேன் அதனிசை யாழிலே அடங்காமையைக் காட்டப்பெறுவேன்” என்றார்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT