Sunday, June 16, 2024
Home » சீரற்ற காலநிலை நிலவுவதால் அவதானம் பேணுவது அவசியம்

சீரற்ற காலநிலை நிலவுவதால் அவதானம் பேணுவது அவசியம்

by damith
May 20, 2024 6:00 am 0 comment

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, கடந்த 24 மணித்தியாலயங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி மத்துகம பிரதேசத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. அதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் மழை பெய்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் களுத்துறை, மத்துகவில் 114.00 மில்லி மீற்றர், கொழும்பு, கொட்டவெகரவில் 108.00 மி.மீ, கம்பஹா, அலவலவில் 104.00 மி.மீ, கேகாலை, வரக்காபொலவில் 103.50 மி.மீ, காலி, எல்பிட்டியவில் 102.00 மி.மீ, களுத்துறை, கல்வலவில் 98.50 மி.மீ, கண்டி, பல்லேபோலவில் 61.00 மி.மீ என்றபடி அதிகூடிய மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இந்த மழைக்காலநிலையுடன் சேர்த்து இரத்தினபுரியில் ஏற்பட்ட கடும் காற்றினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் பகுதியளவில் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கிறது. அதேவேளை வடமாகாணத்தின் சில பிரதேசங்களிலும் கடும் காற்றினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்படுகிறது.

இவை இவ்வாறிருக்க, இந்த சீரற்ற காலநிலையின் விளைவாக நாட்டின் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளநிலையும் மலைநாட்டிலும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவும் ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத் தரவுகளின்படி, நாட்டிலுள்ள சில கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அவற்றில் களுகங்கை, ஜின் கங்கை, நில்வளா கங்கை, மாதுறு ஒயா, மகாவலி கங்கை, யான் ஒயா, மா ஒயா, தெதுரு ஒயா, அத்தனகலு ஒயா என்பவலற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் மேலதிக நீரை வெளியேற்றவென திறந்து விடப்பட்டுள்ளன.

அதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, சீரற்ற காலநிலை நீடிக்குமாயின் கங்கைகளின் இரு மருங்குகளிலும் தாழ்நிலப் பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருப்பது மிக அவசியம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய மழைவீழ்ச்சியினால் காலி, புத்தளம், களுத்துறை உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல வீதிகள் நீரில் மூழ்கின. அதனால் வழமையான போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டன. பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள் அவற்றை துரிதகதியில் சீர்செய்துள்ளனர்.

இச்சீரற்ற காலநிலை காரணமாக மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த வகையில் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, ஹாலிஎல, எல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர, உடுநுவர, பஸ்பாகே கோரளை, கங்க இஹல கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களது பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இதே மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் மலைநாட்டிலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் வாழும் மக்கள் நிலத்திலும், வீட்டுச் சுவர்களிலும் திடீரென வெடிப்புககள் ஏற்படுதல், அவை விரிவடைதல், புதிய நீரூற்றுக்கள் உருவாதல், அந்த நீரூற்றுக்களில் சேற்றுநீர் வெளிப்படல், மின் தூண்களும் உயர்ந்த மரங்களும் திடீரென சரிதல் போன்றவாறான அறிகுறிகள் தென்படுமாயின் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறான அறிகுறிகள் வெளிப்படுமாயின் அப்பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைவாக நகர்வதோடு, அந்த அறிகுறிகள் குறித்து கிராம உத்தியோகத்தருக்கும் பிரதேச செயலாளருக்கும் அறிவிக்கவும் தவறக்கூடாது.

தற்போதைய சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் சேதங்களையும் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுத்துள்ளது. அத்தோடு பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. அதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட மட்ட அலுவலகங்களுக்கு வழங்கியும் உள்ளது.

ஆகவே தற்போதைய சீரற்ற காலநிலை குறித்து கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளக்கூடாது. அது மக்கள் முன்பாக இருக்கும் பாரிய பொறுப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT