Home » குசலின் வீசா தாமதம் குறித்து இலங்கை கிரிக்கெட் விளக்கம்

குசலின் வீசா தாமதம் குறித்து இலங்கை கிரிக்கெட் விளக்கம்

by sachintha
May 18, 2024 10:48 am 0 comment

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக அமெரிக்கா செல்வதற்கான இலங்கை வீரர் குசல் மெண்டிஸின் வீசா நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா, குசல் மெண்டிஸின் அமெரிக்க வீசா நிராகரிக்கப்படவில்லை என்றும் அது செயற்பாட்டில் இருப்பதாகவும் விளக்கினார்.

அவருக்கு அடுத்த ஓர் இரு நாட்களில் அமெரிக்கா செல்வதற்கான வீசா கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்தார்.

‘வீசாவை பெறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதோடு அமெரிக்க தூதரகம் வீரருடன் தொடர்பில் உள்ளது. வீசா செயற்பாட்டில் உள்ளது. தூதரகம் வீரரிடம் மேலதிக விபரங்களை கேட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

கிரிக்கெட் வீரருடன் தொடர்புபட்ட சம்பவம் ஒன்று குறித்து அமெரிக்க தூதரகம் விபரங்களை கேட்டிருப்பதாகவும் ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார். இந்த கிரிக்கெட் வீரருடன் தொடர்புபட்டு 2020 இல் பாணந்துறையில் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பிலேயே அமெரிக்க தூதரகம் விளக்கம் கேட்டிருப்பதாக தொடர்புபட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அணி ஏற்கனவே அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கும் நிலையில், குசல் மெண்டிஸினால் இன்னும் அணியுடன் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வீசாவில் தாமதம் ஏற்பட்டிருந்த மற்றொரு வீரரான அசித்த பெர்னாண்டோவின் வீசா கிடைத்திருக்கும் நிலையில் அவர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ளார். அசித்த பெர்னாண்டோ மேலதிக வீரராகவே இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT