Saturday, June 15, 2024
Home » அட்டாளைச்சேனையில் களைகட்டிய சர்வதேச தாதியர் தின விழா

அட்டாளைச்சேனையில் களைகட்டிய சர்வதேச தாதியர் தின விழா

by sachintha
May 18, 2024 9:04 am 0 comment

அக்கரைப்பற்று INPS Campus தாதியர் கல்லூரி ஏற்பாடு செய்த, சர்வதேச தாதியர் தின விழா நிகழ்வுகள் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றன.

அக்கரைப்பற்று INPS Campus தாதியர் கல்லூரியின் தலைமை நிர்வாகி எம்.அலி சிறாஜ் மற்றும் பணிப்பாளர் ஐ.ரி.ஹானின் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.

தாதியர் சேவையின் ஸ்தாபகர் புளோரன்ஸ் நைட்டிங்கேளின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ம் திகதி சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது. ‘நமது தாதியர்கள் – நமது எதிர்காலம், தாதியர் சேவையின் பொருளாதார சக்தி’ எனும் கருப் பொருளில் இவ்வருடம் சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விழா நிகழ்வுகளில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ெடாக்டர் எஸ்.எம்.றிபாஸ்தீன், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெவ்வை (லொயிட்ஸ்) ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டச் செயலக உளவளத்துணை இணைப்பாளர் மனூஸ் அபூபக்கர் தாதியர் தின பிரதான உரையை நிகழ்த்தினார்.

மனிதனாகப் பிறந்த நாங்கள் தாதியர்களின் சேவையை ஏதோ வகையில் பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் பெற்றுக் கொள்கின்றோம். ஆனால், அவர்களது சேவையின் மகத்துவம், அர்ப்பணிப்பு, தியாகம் என்பனவற்றை நாங்கள் உணர்ந்து கொள்வதற்கு தவறி விடுகின்றோம். இவ்வாறானவர்களுக்கு சர்வதேச தாதியர் தினம் சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். தாதியர்களின் பணி, அன்பு, அரவணைப்பு என்பனவற்றை நாங்கள் நோயாளியாக வைத்தியசாலைக்குச் செல்லும் போதெல்லாம் தெளிவாகக் கண்டு கொள்கின்றோம். அவர்கள் சேவையின் அவசியம் கருதி ஊண், உறக்கமின்றி பணியாற்றுவதையும் நன்கு தெரிந்து கொண்டுள்ளோம். சாதி, மத, பிரதேச, மொழி வேறுபாடுகளின்றி ஏனையவர்களுக்கு மனம் கோணாது உதவும் தொழிலாகவே தாதியர் சேவையை நாங்கள் கண்டு கொள்ளலாம்.

இவ்வாறானவர்களுக்கு சர்வதேச ரீதியில் விழா எடுப்பதும், அவர்களது உணர்வுபூர்வமான பணிகளை நன்றியுடன் நினைவு கூர்வதும். அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்துவதும், அவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பதும் மிகவும் பொருத்தமானதாகும். அந்தவகையில் இவ்விழாவினை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் நன்றி, பாராட்டுக்குரியவர்கள் என்று நிகழ்வில் உரை நிகழ்த்திய அதிதிகள் குறிப்பிட்டனர்.

தாதிய மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. பிரதேச முக்கியஸ்த்தர்கள், விரிவுரையாளர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள், பெற்றார்கள் என அதிகமானோர் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

முகம்மட் றிஸான்…

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT