Friday, June 14, 2024
Home » அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

- பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராரச்சி

by sachintha
May 18, 2024 11:27 am 0 comment

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.

அரசியல் பொறிமுறையால் கொள்கை வகுக்க மாத்திரமே முடியும் எனவும் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான தமது கடமையை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்ராரச்சி,

“வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இதுவரை பொதுமக்களின் நலன்களுக்காக பாரிய பணிகளை செய்துள்ளது. வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க பொறிமுறையை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அது தொடர்பாக அரசதுறையின் செயல்பாடு குறித்து துறைசார் மேற்பார்வைக் குழு ஆய்வு செய்து வருகிறது.

இதன்போது உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைக் கட்டமைப்பு, அமைச்சுகள் போன்ற அனைத்து அரச நிறுவனங்களின் வருடாந்த செயல்திறன் அறிக்கைகளை ஆய்வு செய்கிறோம்.

ஆனால் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளின்படி சில நிறுவனங்களின் செயல்திறன் 23 வீதமாகவே இருக்கிறது.

இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, பல்வேறு பதில்கள் கிடைத்தன. எவ்வாறாயினும் இந்நிலைமையை தவிர்க்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண, மாவட்ட, பிரதேச செயலாளர்கள் உட்பட மக்களுடன் நெருக்கமாக செயற்படும் அரச அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வொன்று நடத்தப்பட்டது.

அதன்போது மக்களுக்கு எவ்வாறு திறமையான மற்றும் நட்புறவான சேவையை வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. மேலும் மக்களுக்கு தங்கு தடையற்ற சேவையை வழங்க அரச ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியது. அடுத்த வருடமும் சம்பளம் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் அரச ஊழியர்கள், மக்களுக்கான கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டும். அரசியல் பொறிமுறையால் கொள்கையை உருவாக்க முடியும். அரச நிறுவனத்திற்கு கண்ணீருடன் வரும் மக்களை சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பும் வகையில் அரச சேவை செயல்பட வேண்டும். அரச துறையில் ஊழல் மோசடிகளை தடுக்கும் வகையில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை நடத்த அவசியமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள முறைகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அரச பொறிமுறை திறம்பட செயல்படுவதற்கான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மேலும், வெற்றிடமாக உள்ள பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT