உலகத்தில் தோன்றிய எல்லா மதங்களும், சித்தாந்தங்களும் ஒப்புக்கொண்ட ஒரே நற்பண்பு ‘உண்மை’. உண்மையாளனாக வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு சராசரி மனிதனும் விரும்புகிறான். உண்மைக்கு புறம்பாக செயல்படும் மனிதர்கள் விரும்பப்படுவதுமில்லை, ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை. பொய்யானவர்கள் என்று சிலரை புரிந்து கொண்டதன் பிற்பாடு நிர்ப்பந்தமாக அவர்களோடு உறவாட கிடைத்தாலும் முழு மனதோடும், முக மலர்ச்சியோடும் அவர்களோடு உறவாட முடிவதில்லை. காரணம் பொய் முகங்களை எம்மால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவோ, மறக்கவோ முடியாது.
இவைகளுக்கப்பால் எந்த மனிதனிடம் உண்மையில்லையோ அவனது வாழ்வில் உயிர்ப்பை இழந்து விடுகிறான். இதனால் அவனது வாழ்வு முழுவதுமே அர்த்தமற்றதாகி விடுகிறது. இதன் காரணமாகத்தான் இஸ்லாம் உண்மை எனும் உயரிய பண்பு குறித்து ஆழமான கவனத்தை செலுத்தியுள்ளது. அல்லாஹுதஆலா எம்மை உண்மையாளர்களாக வாழும்படியும், உண்மையாளர்களோடு சேர்ந்து இருக்கும் படியும் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.
“ஈமான் கொண்ட விசுவாசிகளே….! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் நேர்மையான கூற்றையே கூறுங்கள். (அல் அஹ்சாப்: 70)
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையானவர்களோடு இருங்கள் (தவ்பா: 119)
உண்மையாளர்களாக இருப்பதும், உண்மையாளர்களோடு சேர்ந்திருப்பதும் இஸ்லாமியர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பிறப்பிக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒரு கட்டளையாகும். ஒரு மனிதன் தன்னை இஸ்லாமியனாக அடையாளப்படுத்துவதற்கான அடிப்படை பண்பாக அல்லாஹ் ‘உண்மையை’ வைத்திருக்கிறான்.
உண்மையாளர்களின் பட்டியலில் சேர்த்து விடும்படி பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் எம்மை பணிக்கிறான். உலகத்தில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்களாகிய நபிமார்களின் அடிப்படை பண்பாக உண்மை இருந்தது. அல்குர்ஆனில் பல இடங்களில் இது குறித்து அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் நுபுவத் கிடைப்பதற்கு முன்பே (அல் ஸாதிக்) உண்மையாளன் எனும் பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள். அவரிடம் காணப்பட்ட இவ்வுயரிய பண்பு நுபுவத் கிடைப்பதற்கு முன்பே அவரது சமூகத்தில் மிகப்பெரும் நன்மதிப்பை பெற்றுக் கொடுத்திருந்தது. அன்றைய அறியாமை சமூகம் கூட அவரோடு ஈர்ப்புக் கொண்டு அன்பாக நடப்பதற்கும், அவர் வார்த்தைகளை செவிமடுத்துக் கேட்பதற்கும் காரணமாக அமைந்தது.
இவ்வளவு சிறப்புகளை தாங்கி நிற்கும் ‘உண்மை’ எனும் இப்பண்பு முறையாகவும் முழுமையாகவும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதனை இன்று பலரின் செயல்பாடுகள் உறுதி செய்கின்றன. உண்மை என்றால் நாவோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு அம்சமாகவே பலராலும் பார்க்கப்படுகின்றது. நாவால் பேசப்படும் வார்த்தைகளில் உண்மை பேணப்பட வேண்டியது போல, ஒரு மனிதனது வெளிப்படையான மறைமுகமான செயற்பாடுகளிலும் உண்மை இருக்க வேண்டும் என்பதனை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஒரு மனிதன் உள்ளத்தால் எண்ணும் எண்ணங்களிலும் உண்மை இருக்க வேண்டும். உண்மையற்ற வார்த்தைகளையோ, எண்ணங்களையோ, செயற்பாடுகளையோ அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக உண்மைக்கு புறம்பாக செயல்படுபவர்கள் நரகத்தை நோக்கி செல்கிறார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“உண்மை நன்மைக்கே வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையைப் பேசி உண்மையை தேடினால் அல்லாஹ்வின் பதிவேட்டில் அவர் ஓர் உண்மையாளர் என்று அறியப்படுகின்றார். பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசும் காலம் எல்லாம் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஒரு பொய்யர் என்று அறியப்படுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)
‘உண்மை’ என்னும் உத்தமர்களின் உயரிய பண்பு ஒரு மனிதனது சுவர்க்கத்தை தீர்மானிக்கும் உயரிய சக்தி என்பதை மேற்படி நபிமொழி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மற்றுமொரு நபி மொழியில் நபி (ஸல்)அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். “உண்மை பேசுவதை எனக்கு உத்தரவாதம் தாருங்கள். சுவனத்தை நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன்”. (ஆதாரம்: அஹமத்).
நபி (ஸல்) அவர்கள் உண்மையாளனுக்கு சுவர்க்கத்தை உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள்.’ உத்தம நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். இதிலிருந்து உண்மை என்ற உன்னத பண்பின் மாண்பை எளிதாக புரிந்து கொள்ளலாம். இவ்வுயர் பண்பின் பெறுமானத்தை புரியாதவர்களையே இவ்வுலகில் இன்று அதிகம் காணக் கூடியதாக உள்ளது.
உண்மையாளர்களை காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் உண்மையாக இல்லை. பெற்றோர்களுக்கு பிள்ளைகளும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களும், முதலாளிக்கு தொழிலாளர்களும் தொழிலாளிக்கு முதலாளியும், அண்டை வீட்டுக்காரனுக்கு அண்டை வீட்டுக்காரனும் உண்மையாக இல்லை.
இன்றைய நாகரீக வீச்சில் சிக்குண்டு பலரும் பொய்யான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நூற்றாண்டில் வாழ வேண்டும் என்றால் பொய் சொல்லாமல் காலம் கடத்த முடியாது என்ற எண்ணம் பரவலாக மக்களிடம் இருக்கின்றது. உண்மை மட்டும் பேசுபவனை உதவாக்கரை என்று பட்டம் கொடுத்து ஒரு மூலையில் அமர வைத்திருக்கும் கேவலமான மனப்பதிவை இச்சமூகத்தின் மிகப்பெரும் சாபமாகவே கருத முடியும்.
பொய்யர்களால் ஆளப்படும் எந்த சமூகமும் ஆரோக்கியமான சமூகமாக ஒரு போதும் இருக்க முடியாது. தன் சுயலாபத்திற்காக கஞ்சனை கொடையாளி என்று புகழ்கிறான், கோழையை மாவீரன் என்று புகழ்கிறான். ‘சமூகம்’ என்ற பதத்திற்கான பொருளையே தெரியாதவனை சமூகத்தின் விடிவெள்ளியே என்று புகழ்ந்து தள்ளுகிறான்.
இவ்வாறு பொய்யாக புகழ்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்: “பொய்யாகப் பிறரை புகழ்பவர்களின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள் என்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்”.
(ஆதாரம்; திர்மதி).
எந்த ஒரு விடயத்திற்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு முஸ்லிம் பொய் சொல்வதற்கான அனுமதியை இஸ்லாம் வழங்கவில்லை.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து இவ்வாறு கேட்டார்! இறைவனின் தூதரே! ஓர் இறை நம்பிக்கையாளன் கோழையாக இருப்பானா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் சில சமயம் இருக்கலாம்…. ஓர் இறை நம்பிக்கையாளன் கஞ்சனாக இருப்பானா? சில சமயம் இருக்கலாம்…. ஓர் இறை நம்பிக்கையாளன் பொய்யனாக இருப்பானா? அதுவரை ஒரு சுவர் மீது சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்த அண்ணலார் (ஸல்) அவர்கள் நிமிர்ந்து அமர்ந்தவராக இவ்வாறு கூறினார். இல்லை, இல்லை. ஒருபோதும் ஓர் இறை நம்பிக்கையாளன் பொய்யனாக இருக்க மாட்டான்”
(ஆதாரம்: திர்மதி).
இந்த நபிமொழியில் இருந்து ஒரு பொய்யன் இஸ்லாமியன் என்பதற்கான தகுதியை இழந்து விடுகிறான். மற்ற மனிதர்களை நயவஞ்சகத்தனமான முறையில் பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை இஸ்லாம் மிகப்பெரும் சமூக துரோகிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. இது குறித்த நபி (ஸல்) அவர்களது கூற்று மிக உன்னிப்பாக கவனிக்கத்தக்கதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! “பிறருக்கு நீ செய்யும் மோசடியிலேயே மிகப்பெரிய மோசடி எது தெரியுமா? நீ உண்மைதான் சொல்கிறாய் என்று நம்பும் உனது சகோதரனிடம் பொய்யை மட்டுமே நீ பேசுவது”.
(ஆதாரம்: அபூதாவுத்).
எனவே நம் பொய்யான முகங்களை களைந்து உண்மையாளர்களாக வாழ்வதற்கான எத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாம் அல்லாஹ்விடம் எங்களை உண்மையாளர்களின் கூட்டத்தில் சேர்க்கும் படி பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லாஹுத்தஆலா எம் அனைவரையும் உண்மையாளர்களின் கூட்டத்திலே சேர்த்தருளட்டும்.
கலாநிதி, அல்ஹாபிழ்
எம்.ஐ.எம். சித்தீக்…
(அல்-ஈன்ஆமி)
B.A.Hons, (Al- Azhar University, Egypt) M.A.& PhD (International Islamic University, Malaysia)