Home » மறுமலர்ச்சியை இலக்காக கொண்ட கல்வி மறுசீரமைப்பு

மறுமலர்ச்சியை இலக்காக கொண்ட கல்வி மறுசீரமைப்பு

by Gayan Abeykoon
May 17, 2024 1:00 am 0 comment

னிநபரினதும் சமூகத்தினதும் மாத்திரமல்லாமல் நாட்டினதும் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் கல்வி இன்றியமையாததாகும். கல்வியின் ஊடாகவே முன்னேற்றங்களை அடைந்து கொள்ள முடியும். கல்வி இன்றி முன்னேற்றத்தை எட்டிக்கூடப் பார்க்க முடியாது என்பதுதான் அறிஞர்களின் கருத்தாகும்.

அந்த வகையில் சுதந்திரத்திற்கு முன்பே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட இலங்கை எட்டு, ஒன்பது தசாப்தங்களாக இலவசக் கல்விக் கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. இதன் நிமித்தம் வருடா வருடம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகக் கோடானு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து செலவிடுகின்றது. இக்கல்விக் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கவென விசாலமான உட்கட்டமைப்பு வசதிகளையும் பௌதிக வளங்களையும் ஆளணியையும் இந்நாடு கொண்டுள்ளது.

இதன் பயனாக இந்நாட்டில் 92 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவைப் பெற்றுக் கொண்டவர்களாக உள்ளனர். ஆன போதிலும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் மட்டத்தில் எழுத்தறிவு மட்டம் காணப்பட்டும் கூட கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இந்நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானதோடு நாடும் மக்களும் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்தார்கள்.

இப்பின்புலத்தில் இந்நாட்டின் கல்வியை வினைதிறனாக்க வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. அதற்கான வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்று வெளியாகின்றவர்களில் குறிப்பிடத்தக்களவிலானோர் தொழிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலைக்கு உள்ளானவர்களாக இருந்து வந்தனர். அவர்களுக்கு அரசாங்கமே தொழில் வாய்ப்பை வழங்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

அதன் காரணத்தினால் இந்நாட்டின் கல்விக் கொள்கையை நவீன உலகிற்கு ஏற்ப மறுசீரமைப்பதன் அவசியம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. அவ்வாறான மறுசீரமைப்பின் ஊடாக பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியாகின்றவர்கள் தொழிலுக்காக காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தச் சூழலில் தான் கல்வியின் ஊடாக நாட்டில் துரித மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தபட்டிருக்கின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையில் திருத்தங்களை மேற்கொண்டு நவீன யுகத்திற்கு ஏற்ற விதத்தில் கல்வி முறைமையை மாற்றியமைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்நாட்டின் இளம் பராயத்தினர் அனைவருக்கும் கல்வி பொதுத்தராதர உயர்தரம் வரையும் கல்வியை பெற்றுக் கொடுப்பத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப இவ்வருடம் முதல் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுற்றதும் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து இருக்கிறது. இதற்கேற்ப ஜுன் மாதம் 04 ஆம் திகதி முதல் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதியுள்ள மாணவர்களுக்கு உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதன் நிமித்தம் நேற்றுமுன்தினம் விஷேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு அந்த சுற்றறிக்கையை மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

இத்திட்டத்தை இந்நாட்டின் புத்திஜீவிகளும் கல்விமான்களும் மாத்திரமல்லாமல் மாணவர்களும் பெற்றோரும் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நடவடிக்கையின் ஊடாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய பின்னர் உயர் தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் வரையில் மாணவர்களின் நேர காலம் வீண்விரயமாவது தவிர்க்கப்படுகிறது.

முன்பெல்லாம் க.பொ.த சாதாண தர பொதுப்பரீட்சை எழுதி பெறுபேறு வெளிவந்த பின்னர் பெறுபேறுகளின் அடிப்படையில் தான் உயர் தர வகுப்புகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவர். இதனால் பெறுபேறு வெளிவரும் வரையும் சில மாணவர்கள் தொழில்களுக்கு செல்லக்கூடியவர்களாக விளங்கினர். இவர்களில் பலர் இடைநடுவில் கல்வியை கைவிட்டு விடக்கூடியவர்களாக இருந்தனர். இன்னும் ஒரு தொகுதி மாணவர்கள் பெறுபேறு வெளியாகும் வரை கல்வியுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்களாக இருந்து வந்தனர்.

இவ்வாறான மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுப் பரீட்சை பெறுபேறு வெளியான போதிலும் உயர் தரக்கல்வியைத் தொடர விரும்பாதவர்களாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் மாணவர்களின் நலன் கருதி க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுற்றதும் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் கல்விமான்களால் அடிக்கடி எடுத்துக்கூறப்பட்டு மாணவர்கள் இடைநடுவில் கல்வியைக் கைவிடுவதை குறைத்துக்கொள்ளலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பின்னணியில் மாணவர்களது நலன்களை முன்னிலைப்படுத்தி சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவர முன்னர் உயர்தரக் கல்வியைத் தொடர மாணவர்களுக்கு வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படுகிறது. நாட்டில் எல்லா மாணவர்களுக்கும் உயர்தரம் வரை கல்வியைப் பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன் ஊடாக மாணவர்கள் மாத்திரமல்லாமல் நாடும் கூட நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும். இதனை உறுதிபடக்கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT