Thursday, July 18, 2024
Home » இலங்கையின் முதலாவது காலநிலை அமர்வு 2024 உடன் அமானா வங்கி கைகோர்ப்பு

இலங்கையின் முதலாவது காலநிலை அமர்வு 2024 உடன் அமானா வங்கி கைகோர்ப்பு

by Rizwan Segu Mohideen
May 17, 2024 11:08 am 0 comment

காலநிலை மீட்சியுடனான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில், அறிமுக Code Red Sri Lanka Climate Summit 2024 நிகழ்வின் பிரதான அனுசரணையாளராக அமானா வங்கி கைகோர்த்திருந்தது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாநாடு, சர்வதேச மற்றும் இலங்கை உள்ளம்சங்களின் அடிப்படையில், பிரதான பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்படக்கூடிய தடங்கல்கள் வெளிப்படுத்தி, காலநிலை மாற்ற நெருக்கடி தொடர்பான ஆழமான புரிதலை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டிருந்தது. காலநிலை நெருக்கடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், இலங்கையின் நிறுவனங்களுக்கு வியாபார வாய்ப்புகளுக்கான திறவுகோலையும் வெளிப்படுத்தியிருந்தது.

மூன்று நாள் மாநாடு, மே மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கலாக 50க்கும் அதிகமான பேச்சாளர்கள் அடங்கியிருந்தனர். காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள், குறைந்த காபன் மற்றும் காலநிலை மீட்சி பொருளாதாரத்துக்கு அவசியமான கொள்கை மாற்றங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டிருந்தன. வழமையான அமர்வுகளுக்கு மேலதிகமாக, பிரத்தியேகமான பிரதம நிறைவேற்று அதிகாரி அமர்வு முன்னெடுக்கப்பட்டதுடன், இதர நாடுகளின் முன்னணி பிரதம நிறைவேற்று அதிகாரிகளும், வியாபார உரிமையாளர்களும் கலந்து கொண்டு, வியாபார தீர்மானங்களில் காலநிலை மாற்றம் தொடர்பான தமது ஆழமான புரிதல்களை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த கைகோர்ப்பு தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான வங்கியியல் செயன்முறைகளை ஊக்குவிக்கும் எமது பிரத்தியேகமான வியாபார மாதிரியின் அடிப்படையில், இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த அறிமுக Sri Lanka Climate Summit உடன் கைகோர்த்திருந்ததையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இன்றைய சூழலில், காலநிலை நெருக்கடி தொடர்பான சாதாரண விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல, திரண்ட செயற்பாடுகளுடன் பின்தொடரப்பட வேண்டும். இந்த மாநாட்டினூடாக அர்த்தமுள்ள கலந்துரையாடல் செயற்படுத்தப்படுவதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு எமது புவியை வளங்கள் நிறைந்ததாக பேணுவதற்கு எமது பிரதான பங்காளர்களை ஈடுபடுத்துவதாகவும் அமைந்திருக்கும் எனவும் நம்புகின்றோம்.” என்றார்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் வங்கியின் மூலோபாயம் மற்றும் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்கான உப தலைவர் பஸ்லி மரிக்கார் கருத்துத் தெரிவிக்கையில், “எமது பிரத்தியேகமான மாதிரிக்கமைய நிலைபேறான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வங்கி எனும் வகையில், Code Red Climate Summit உடன் கைகோர்த்து, காலநிலை மீட்சி பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கும் உள்ளடக்கமான கலந்துரையாடலில் ஈடுபடுவதையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT