CSK அணியின் முன்னாள் கேப்டன் தோனி காயத்தில் இருந்து குணமடைந்து வலைப் பயிற்சியில் பந்துவீச்சில் ஈடுபடும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
IPL 2024 தொடரில் CSK அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. CSK அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், சென்னை அணியின் செயல்பாடுகள் இரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் முன்னாள் அணியின் கேப்டன் தோனி 13 போட்டிகளில் விளையாடி 136 ஓட்டங்களை விளாசி இருக்கிறார். கடைசி ஓவர்களில் களமிறங்கும் தோனி, CSK அணிக்கு தேவையான அதிரடியை வெளிப்படுத்தி வந்துள்ளார். கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், இந்த சீசனில் குறைந்த ஓவர்களே துடுப்பெடுத்தாடி வருகிறார். இதுகுறித்து CSK அணியின் பயிற்சியாளர்கள் தரப்பில், தோனியால் 2 முதல் 3 ஓவர்கள் வரை மட்டுமே துடுப்பெடுத்தாட முடியும். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் துடுப்பெடுத்தாடும் போதும் தோனி 2 ஓட்டங்களுக்கு மேல் ஓட முடியாமல் திணறி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது கூட தோனி காலில் ஐஸ் பேக் வைத்திருந்தார். இந்த நிலையில் RCB அணிக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரில் CSK அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போது CSK ஜாம்பவான் தோனி, பந்துவீச்சில் ஈடுபட்டு ஆச்சரியம் அளித்துள்ளார்.
இதனால் காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தோனி சிறப்பாக மீண்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த வீடியோவை CSK அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இரசிகர்கள் பலரும் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பிளே ஆஃப் தொடர் நெருங்கியுள்ள சூழலில், தோனி முழு ஃபிட்னஸ்-க்கு திரும்பியிருப்பது CSK அணிக்கும் சாதகமாக அமைந்துள்ளது.